Tuesday, October 16, 2007

லேடீஸ் ஹாஸ்டல் லூட்டீஸ்

அட அட அட... கொஞ்ச நாளு ஆணி ஜாஸ்தியானதால அமைதியா இருந்துட்டேன் . இனிமேல் தொடர்ந்து வருவேனு நினைக்கறேன். சரி மேட்டருக்கு வருவோம். காலேஜ் லைஃப் லூட்டீஸ், ராகிங் காமெடி, காலேஜ் லவ் ஸ்டோரீஸ் இப்படி காலேஜ் வச்சு நிறைய எழுதியிருக்காங்க. ஒரு சேஞ்சுக்கு லேடீஸ் ஹாஸ்டல்ல நாங்க பண்ணின லூட்டீஸ் எல்லாம் எழுதினா என்னன்னு தோணிச்சு. சோ ஒரு சின்ன ட்ரை :)))

நான் UG படிச்ச காலேஜ் பயங்கர ஸ்ட்ரிக்ட். அதும் ஃபர்ஸ்ட் இயர்ல அப்போதான் ஸ்கூல் முடிச்சு வந்த பொண்ணுங்கன்றதால எல்லாம் வார்டனை பாத்தா ரொம்ப பயந்துப்பாங்க. நாமதான் எங்க போனாலும் விதிவிலக்குதானே. நமக்குனு ஒரு செட் வேற எங்க போனாலும் அமைஞ்சிடுது. ஹி... ஹி... போயி ஒரு மாசத்துல லூட்டிய ஆரம்பிச்சாச்சு. எங்க ரூம்ல இருக்கறது எல்லாமே பயங்கர அராத்து கேஸுங்க. எப்பவும் ரொம்ப ஜாலியா இருக்கும். அதனால வேற ரூம் பொண்ணூங்களும் எங்க ரூம்ல எப்போதும் இருப்பாங்க. எப்பவும் ஒரு பன்னெண்டு, பதிமூணு பேரு இருப்போம்.

தினமும் சாயந்திரம் 6 மணில இருந்து 8 மணி வரைக்கும் ஸ்டடி அவர். காலேஜ் வந்ததுக்கப்புறமும் படி படின்னா நல்லாவா இருக்கு??? கொஞ்சமாவது அவங்களுக்கு மேல் மாடி வேலை செய்யக்கூடாது??? ச்சே... ச்சே... என்ன ஆளுங்க இவங்கன்னு ஒரு மூச்சு ஃபீல் பண்ணிட்டு வழக்கம் போல எங்க அரட்டை கச்சேரிய ஆரம்பிச்சோம். அப்படியே குட்டி குட்டி வட்ட மேஜை மாநாடு போட்டு அப்படி அப்படியே ஜோதில ஐக்கியமாயிட்டோம்(ஒண்ணா போட்டா வார்டன் வரப்போ மாட்டிக்குவோம்னு ஒரு சேஃப்டிக்காக). நானும் இன்னும் ஒரு மூணு பேரும் சேர் போட்டு உக்காந்து மாநாடு நடத்திட்டு இருந்தப்பதான் எங்க கண்ணுல படற மாதிரி உக்காந்திருந்த ஒரு கேங் அப்படியே மெல்ல எழுந்து நின்னாங்க. நாங்க நாலு பேரும் அவங்களைப் பாத்து ஏன்டி நிக்கறீங்க அப்படி இப்படின்னு கேட்டு பயங்கரமா ஓட்டறோம் அவளுங்க வாயவே திறக்கவே இல்லை. என்னடா இதுனு மெல்ல திரும்பி பாத்தா கதவுகிட்ட வார்டன்........ ஓ மை காட்..........

அடுத்த அஞ்சு நிமிஷத்துல வார்டன் ரூம்ல நின்னுட்டு இருந்தோம் :'( எங்க வார்டன் ரூம்ல ரூமை ரெண்டா பிரிக்கிற மாதிரி ஸ்க்ரீன் போட்டிருப்பாங்க. ஸ்க்ரீன்க்கு ஒரு பக்கம் அவங்க பெட் இருக்கும். கதவுக்கு பக்கம் இருக்கற சைடுல டேபிள் போட்டு நிறைய கதை புக்ஸ் வச்சிருப்பாங்க. ஒரு ரெண்டு பேர் மட்டும் அவங்க கண்ணுல படற மாதிரி போயி நிப்போம்(இது டர்ன் பேசிஸ்). இந்த தடவை டர்ன்ல நான் மாட்டிட்டேன். நானும் இன்னொரு பொண்ணும் வார்டன் முன்னாடி நின்னோம். அவங்க பாட்டுக்கு வாயில வந்ததெல்லாம் சொல்லி சொல்லி திட்டிட்டு இருந்தாங்க. நாங்க ரெண்டு பேரும் தலைய குனிஞ்சு ஓரக்கண்ணுல ஸ்க்ரீன் அந்த பக்கம் இருந்த துரோகிங்களை பாத்துட்டு நின்னோம். பிசாசுங்க கொஞ்சமாவது நாங்க பாவம்னு நினைக்க வேணாம். எல்லாம் சிரிச்சு சிரிச்சு ஹஸ்கி வாய்ஸ்ல எங்களை கமென்ட் அடிச்சிட்டு இருக்காளுங்க. அவளுங்க சிரிக்கறதை பாத்து எங்களுக்கும் சிரிப்பை அடக்க முடியலை. ஒருத்தி வேக வேகமா அங்க இருந்த கதை புக்ஸ் எடுத்து எது நல்லா இருக்குனு மேலோட்டமா பாத்து கலெக்ட் பண்ணிட்டு இருந்தா.

வார்டன் திட்டி சோர்ந்து போயி இதுங்களுக்கு என்ன சொன்னாலும் ஏறாதுனு ஒரு கட்டத்துல "இந்த வாரம் ஊருக்கு கூட்டிட்டு போக உங்க பேரண்ட்ஸ் வருவாங்க இல்ல. அப்போ என்னை வந்துப் பாத்து என் பொண்ணு இனிமே இப்படி செய்ய மாட்டானு லெட்டர் எழுதி கொடுத்தாதான் விடுவேன்"-ன்னு ஒரு குண்டை தூக்கிப் போட்டாங்க. உடனே எல்லாரும் பயந்து போயிட்டோம். "இல்லை மேம்.... இனிமேல் இப்டி பண்ண மாட்டோம். ப்ளீஸ் மேம். இது ஒரு தடவை விட்டுடுங்க"-ன்னு அப்படியே பிட்ட போட்டோம். அவங்களும் அசர மாதிரி தெரியலை. நானும் என் ஃப்ரெண்டும் மூஞ்சிய ரொம்ப பாவமா வச்சுட்டு(நமக்கு நடிக்க சொல்லியா தரணும்) பேசி பேசி கடைசில எங்களையே என்ன பனிஷ்மென்டுனு சொல்ல சொன்னாங்க. ரொம்ப யோசிச்சு யோசிச்சு "ஒரு வாரத்துக்கு காலைல 6 to 8 உங்க ரூம் முன்னாடி உக்காந்து படிக்கறோம்"-னு நான் சொன்னேன். எங்காளுங்க எல்லாம் ஆடிப் போயிட்டாளுங்க. எங்க சூரியன் 8 மணிக்குதான் உதிக்கும். அதுவும் ஒருத்தி 8.30 மணிக்கே அலாரம் வச்சுதான் எழுவா. அப்படியே ஆத்தா கணக்கா என்னை மொறைக்கறாளுங்க. ஆனா எங்க வார்டன் அப்டியே ஷாக் ஆகி "ஓஹோ! உங்களுக்கு படிக்கிறது ஒரு பனிஷ்மென்டா?" அப்படினு கேட்டதும் தான் ஆஹா! மேட்டர் இப்டி வில்லங்கமா போகுதேனு "இல்ல மேம். காலைல 6 மணிக்கு எழுந்து வரணும் இல்ல. அதை பனிஷ்மென்டுனு சொன்னேன்" அப்படி இப்படினு சமாளிச்சு வச்சோம்.

"சரி அதையே பண்ணுங்க"-ன்னு அவங்க சொன்னதும் அப்பாடா ஒரு கண்டத்துல இருந்து தப்பிச்சோம்னு நினைச்சோம். ஏன்னா அவங்களே எப்பவும் 8 மணிக்குதான் எழுந்திருப்பாங்க. சோ நாங்க 7.45க்கு அங்க ஆஜர் ஆனா போதும். ஒரு வாரம் கஷ்டப்பட்டு போயிடலாம்னு சந்தோஷமாகிட்டோம். மறுபடியும் அவங்க "அப்படியே எல்லாரும் ஆளுக்கு 100 ரூபா ஃபைன் கட்டிடுங்க"-ன்னு பொசுக்குன்னு சொல்லிப்புட்டாங்க. ஆஆஹ்ஹ்ஹ்!!!!! எங்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடுச்சு. திருப்பி நானும் என் ஃப்ரெண்டும் ஒரு அரை மணி நேரம் பேசினோம். அதுக்கப்புறம் "சரி நீங்களே சொல்லுங்க. எவ்ளோ ஃபைன் கட்டறீங்க" ன்னு கேட்டாங்க. நான் மெல்ல "ஃபைவ் ருபீஸ்" ன்னேன். என்னோட நின்னுட்டிருந்தவ "ட்வென்டி ஃபைவ் ருபீஸ்"னு சத்தமா சொன்னா. எனக்கு வந்ததே கோபம். 'அடி பாவி! அஞ்சு ரூபாயில முடிக்கலாம்னு நான் ப்ளான் போட்டுட்டு இருக்கேன். அப்படியே பேசி ஒரு பத்து ருபாயிக்கு ஒத்துக்கலாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தா இந்த டாக் இப்படி சொதப்பிடுச்சே" எனக்கு ஒரே கடுப்பு. சைடுல பாத்தா எல்லாரும் எங்களை கொல வெறியோட பாக்கறாளுங்க. வார்டன் என்னடாடான்னா "100 ரூபா எங்க ... 25 ரூபா எங்க ... அதெல்லாம் முடியாது"ன்னுட்டாங்க. அப்புறம் அதுக்கு ஒரு அரை மணி நேரம் பேசி ஓகே பண்ணிட்டு வந்தோம். ஆனா கடைசி வரைக்கும் நாங்க அந்த 25 ரூபாயை கட்டவே இல்லை. காலைல ஒரு 7.45, 7.50க்கா போயி அட்டெண்டன்ஸ் போட்டுட்டு வந்துடுவோம். ஹ்ம்ம்ம்............. ஆனா இப்படி அடிக்கடி மாட்டி வார்டன் ரூமுக்கு போயிட்டு வந்ததாலதான் எங்க அறிவு ரொம்ப விசாலமடைஞ்சிது. ஏன்னா பல விதமான புக்ஸ்(ஒன்லி ஸ்டோரி புக்ஸ்) அங்க இருந்துதான் சுட்டுட்டு வந்தோமில்ல ;)

Monday, October 1, 2007

இவர்கள் என்ன செய்து கொண்டிருந்திருப்பார்கள்...?

பபாச கொஞ்ச நாளா சொந்த வேலை காரணமா பிஸியா இருக்க மக்கள்ஸ் சங்கம் அம்பேல்னு சவுண்டு உட ஆரம்பிச்சிட்டாங்க.

அப்பப்ப அதிரடியா வந்து தாக்குவோம்ல

சங்கத் தலைவி அனுசுயா உடனே ஏதாச்சும் செய்யனும்னு சொல்ல இன்ஸ்டண்ட்டா செய்யனும்னா சினிமா நியூஸ்தான் சரி வரும்னு நம்ம பேவரிட் நடிகர் நடிகைகளை ஒரு பேட்டி எடுத்தோம்.
பொதுவா நீங்க நடிக்க வரலைன்னா என்னவா இருந்திருப்பீங்கன்னா கலெக்டர்,டாக்டர்னு பீலா உடுவாங்க.இவங்க என்ன சொல்றாங்கன்னு பாருங்க.

விஜயகாந்த்: நடிக்க வரலைன்னா நான் என்ன செஞ்சிகிட்டிருப்பேன்னு தமிழ் நாட்டுல எந்த பச்சப் புள்ளையக் கேட்டாக் கூட சொல்லும்.
தமிழ்நாட்டுல எத்தனை கிராமம் இருக்கு அங்க எத்தனை குழந்தங்க இருக்காங்க இன்னும் எத்தனை குழந்தைங்க புதுசா பொறக்கப் போகுதுங்க அதுல எத்தனை பேர் என்னோட தே.மு.தி.க கட்சிக்கு ஆதரவா இருக்காங்க எத்தனை பேர் ஓட்டு போட்டு 2020 க்குள்ள என்னை முதல்வரா போறாங்கன்னு புள்ளி விபரம் எடுக்கும் ஆபிஸரா போயிருப்பேன்.

ராமராஜன்: ஏம்மா தாய்க்குலமே உனக்குத் தெரியாதா?நீல கலர் டவுசரும் தலையில ஒரு முண்டாசும் கட்டிகிட்டு வீடு வீடா போயி மாடு இருக்கான்னு பார்த்து பாடிக் கிட்டே பால் கறந்துகிட்டு இருப்பேன்.என் அரை டவுசர் பாக்கெட்டுல எப்போதும் ஒரு சின்ன டேப்ரிக்கார்டர்ல 'செண்பகமே....செண்பகமே....பதிவு பண்ணி வச்சிருக்கேன்ல

விக்ரம்: நானா...ம்ம்ம்....தெனமும் காலையில ரயில்வே ஸ்டேஷன் பிளாட் பாரத்துல குருடன் மாதிரி முழிய மாத்திகிட்டு 'புண்ணியம் தேடி காசிக்குப் போவார் இந்த உலகத்திலே...ன்னு பாடுவேன்.
மத்தியானம் சுடுகாட்டு பக்கம் போயி எரியற பொணத்துக்கு முன்னாடி ஒக்காந்து காவிப் பல்லைக் காட்டிகிட்டு ,'ஆஹ் பாஅவிபஈஇவூ...ஆஆப்ம் ஆஆஆஆஅவ்வாஅர்ர்ரூ ஆஆஅ ன்னு பாடுவேன்.
ராத்திரி நேரத்துல தலை முடியை விரிச்சி மூஞ்சி மேல போட்டுக்கிட்டு தெரு முக்குல இருக்குற புரோட்டா கடைக்கு போயி கடன் குடுக்க மாட்டியா எனக்கு நான் அந்நியண்டா .உனக்கு கருடா புராணத்துல இந்த தண்டனைதான்னு சொல்லிட்டு புரோட்டா மாஸ்டரை கைமா பண்ணுவேன்

தங்கர் பச்சான்:ஆஹா நான் தமிழன்
'ஒன்பது மணிக்கு ஒன்பது மணிக்கு பள்ளிக்கூடாம்டா நாலரை மணிக்கு நாலரை மணிக்கு வீடு திரும்புடா'
ன்னு சொல்லி எல்லாப் பசங்களையும் பள்ளிக்கூடம் அழைச்சிப் போவேன்.
ஆங்.அழகி ங்களுக்கு முன்னுரிமை..நான் சொல்லமறந்த கதை ஒன்னு இருக்கு.என் படத்துல ஆங்கில கலப்பே இருக்காது
'ரோஸ் மேரி.....நீ என் ஜூஸ் மாரி..ஏனுங்க இது நம்ம படத்துபாட்டுதானுங்க.

ஜோதிகா: ஹாய் ...நான் ஹோல்சேல் டீலராயிருந்திருப்பேன்.அட நம்ம இதயம் நல்லெண்ணைக்குத் தாங்க.என்ன ஒன்னு விக்கிறத விட நான் இட்லிக்கு ஊத்திக்கிறதுதான் கொஞ்சம் அதிகமாயிருக்கும்

ஸ்நேகா:சரவணா ஸ்டோர்ஸில் நல்ல சேல்ஸ் கேர்ளா சேர்ந்திருப்பேன்.அப்பத்தான் அவங்க கடை துணிகள்,நகைகள் எல்லாத்துக்கும் மாடலா பர்மணெண்டா இருக்க முடியும்.[இந்த ஸ்ரேயா வேற போட்டியா கெளம்பிடுச்சி இல்ல]

திரிஷா:நிச்சயமா நான் பொறுக்கி கிட்டு இருந்திருப்பேன்.அதாங்க ஃபாண்டா பாட்டிலு மூடிங்க
நூறு மூடி பொறுக்கிக் குடுத்தா ஒரு பாட்டில் இலவசமா குடிக்கலாமில்லை?ஸ்கூல் டேஸ்ல இருந்தே இதுல நல்ல டிரெய்னிங் இருக்கு.

தேவயானி: இப்ப செய்யறதான் அப்பவும் செஞ்சிகிட்டு இருப்பேன்.மெகா சீரியல்ல நடிச்சிகிட்டே இருந்திருப்பேன்.
எப்படியும் என் மகள் இனியா பெரிய பொண்ணாயிட்டு வந்து என் ரோலை செய்யறவரைக்கும் கதையை இழுத்துக்கிட்டே......போயி அப்பால அவ நடிப்பா..
[ம்ம் இன்னும் ஒன்னு முடிந்தவரை எல்லா சீன்லேயும் அது வீடானாலும்,ஆபிஸ்னாலும் இல்லை ஹாஸ்பிடல்ல ஐ.சி யூனிட்னாலும் நான் ஹேண்ட் பேக்கை மாட்டிக்கிட்டேதான் இருப்பேன்.]



இந்த மொக்கை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா......

Monday, September 17, 2007

எங்கள் தேவதைக்கு ஒரு வாழ்த்து!!



ழகாய் ஒரு தேவதை
ருயிர் தோழியாய் வந்தாள்

னிய மொழிகள் பேசி
ர்த்துவிட்டாள் நம் மனதை

ணர்வுகளை கவிதையாய் வடித்து
மையாக்கினாள் நம்மை

ண்ணிலடங்கா நண்பர்கள் கொண்டிருந்தாலும்
காந்தத்தையும் ரசிப்பவள்

தீகங்களை உடைத்தெறிய விரும்புபவள்

ரே கருவை கொண்டே
ராயிரம் கவிதைகள் வடிப்பவள்

வியம் அறியாதவள்
'' - போன்று தனித்துவம் வாய்ந்தவள்

இந்த வாரம் நட்சத்திரமாக ஜொலிக்கப் போகும் எங்கள் கவிதாயினிக்கு சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் :))

Saturday, September 15, 2007

விநாயகா எங்க மெளஸ காப்பாத்து



இன்னிக்கு காலைல எழுந்திருச்சு விநாயகர் சதுர்த்தி ஆச்சே நம்ம கணேசன குளிப்பாட்டலாம்னு போயிருந்தோம். சங்க கட்டிடத்துக்கு முன்னாடியே ஒரு விநாயகர் வெச்சிருக்கோம்ல. மைப்ரெண்ட் போய் கணேசன எழுப்பி குளிப்பாட்டும்போது தான் ஆரம்பிச்சாரு பாருங்க அழுகைய. அடஅடஅட உங்க வீட்டு அழுகை எங்க வீட்டு அழுகையில்ல செம அழுகைங்க.

கண்மணி : விநாயகா உனக்கு என்ன கஷ்டம் ஒரு நாள்தான குளிப்பாட்டறோம் இதுக்கு போய் இவ்ளோ அழுகையா?

இம்சை : விநாயகர் காயத்ரி கவிதைய படிச்சுட்டாறோ என்னவோ?

கவிதாயினி : ஆண்டவா என் கவிதைக்காக நீ அழலாமா? நான் வேணா இனிமேல கவிதை எழுதறத விட்டுட்டு கவுஜ எழுதறேன் அழாதப்பா கணேசா.

அனு : அட விநாயகருக்கு அவரோட எலிய காணோமாமா அதுக்குதான் அழறாரு

மை ப்ரெண்ட் : ஓ அதானா விசயம் இப்பதான பார்த்தேன் இங்கதான இருந்தது. (உடனே ஜி3 யோட மெளஸ எடுத்து விநாயகர்கிட்ட தர்ராங்க.)

ஜி3 : என் மெளஸ் எவ்ளோ புண்ணியம் பண்ணியிருக்கு பாருங்க விநாயகருக்கே கொடுக்கற அளவுக்கு இதுக்காகவே செஞ்ச சுண்டல் கொழுக்கட்டை எல்லாத்தையும் எனக்குதான் தரனும் இப்பவே சொல்லிடறேன்.


உடனே எல்லாரும் அதெப்படி நாங்களும்தான காலைல இருந்து காத்துகிட்டு இருக்கறோம் எங்களுக்கும் கொழுக்கட்டை வேணும் அப்டீங்கறாங்க.

கண்மணி : அட குழந்தைங்களா இங்க யாரு சுண்டல் கொழுக்கட்டை செஞ்சாங்க. சமத்தா எல்லாரும் அவங்க அவங்க தெரு முக்குல இருக்கற விநாயகர் கோவிலுக்கு போயி சுண்டல் தருவாங்க வாங்கி சாப்பிட்டுக்கோங்க



இதை கேட்டு எல்லாரும் முழிக்கறாங்க. அப்ப நம்ம
கவிதாயினி : அங்க பாருங்க நம்ம பிள்ளையாரோட எலி குளிக்க போயிருந்தாராமா அவர் வரதுக்குள்ள நாம நம்ம மெளஸ குடுத்ததால பிள்ளையாரு எலிய திரும்பிகூட பார்க்க மாட்டேங்கறாரு பாருங்க நம்ம எலிகுட்டி முகத்துல எவ்‍ளோ சோகம்னு :(

இம்சை : அய்யோ எல்லாரும் கொஞ்சம் கொழுக்கட்டை குடுங்கப்பா கவிதாயினி வாய்க்கு குடுக்கனும் இல்லீனா இதுக்கும் ஒரு சோக கவிதை எழுதிடுவா :)


விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அனைவருக்கும். எல்லாரோட மெளஸயும் அந்த விநாயகர் காப்பத்தனும்னு நானும் வேண்டிக்கிறேன்.

டிஸ்கி : இதை படிச்சுட்டு உக்காந்து இருந்து பக்கத்து கோவில்ல சுண்டல் கொழுக்கட்டை தீர்ந்து போனா அதுக்கு சங்கம் பொறுப்பல்ல :)

Saturday, September 1, 2007

ஜி3 க்கு பிறந்தநாள் - கொண்டாடலாம் வாங்க!!


ஹாய் மக்காஸ் அண்ட் மக்கீஸ்!!

இன்னிக்கு எங்களுக்கு வெரி ஸ்பெஷல் டே!! எங்கள் செல்லத் தோழியும் ப்ரிய சகோதரியுமாகவும்.. பயமறியாப் பாவையர் சங்கத்தின் 'அசைக்க முடியாத தூணாகவும்' (இதுல உள்குத்து ஒன்னும் கிடையாதுங்கோ!!) விளங்கும் ஜி3 என்ற காயத்ரிக்கு இன்று பிறந்த நாள்!!!

அவளைத் தெரியாதவங்களோ அவளுக்குத் தெரியாதவங்களோ யாரும் இந்த பதிவுலகத்துல கிடையாது! அந்த அளவுக்கு அம்மணி பிரபலமா இருந்தாலும் இந்த சிறப்பான நாள்ல அவளைப் பத்தி எல்லாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியது எங்க கடமை! சும்மா ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்கு தெரிஞ்சி வெச்சுகோங்க.... சிவில் சர்வீஸ் எக்ஸாம் மாதிரியான போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும். :)

ஜி3 'பய'டேட்டா

பெயர் : காயத்ரி நாதன்

செல்லப் பெயர் : ஜி3

வயது : 17 முடிந்து 16 துவக்கம்!

தொழில் : மொக்கை போடுவது

உபதொழில்கள் : உறங்குவது, ஊர் சுற்றுவது, வாழ்த்துப் பதிவு போடுவது

பொழுது போக்கு : ஆபீஸ் போவது

பிடித்த 3 விஷயங்கள் : 1. சாப்பிடுவது 2. சாப்பிடுவது 3.நிறைய சாப்பிடுவது!

பிடித்த 3 பதிவுகள் : 1. இட்லிவடை, 2. சட்னி வடை, 3. தாளிக்கும் ஓசை..

பிடித்த 3 பாடல்கள் : 1. கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்....
2. நித்த நித்த நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா..
3. உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா...

பிடித்த 3 சொற்கள் : கட், காபி, பேஸ்ட்.

விரும்புவது : ஹோட்டல்களில் நடக்கும் பதிவர் சந்திப்புகளை

வெறுப்பது : சாப்பிடும் போது குறுக்கே கேள்வி கேட்பவர்களை

சமீபத்திய சாதனை : தமிழ்மணத்தில் இணையாமலேயே 'தமிழ்மனங்கள்' பலவற்றில் இணைந்தது

நீண்ட கால சாதனை : 'ஜி3 செய்வது' என்றால் 'சுடுவது' என உலகறியச் செய்தது

வாழ்நாள் லட்சியம் : உலக நன்மை (?!) வேண்டி 45 நாட்கள் 'தொடர் உண்ணும் விரதம்' மேற்கொள்வது!


இப்படியாப்பட்ட நல்ல பொண்ணுக்கு பொறந்தநாளுங்க இன்னிக்கு! எல்லாரும் வந்து மனசார வாழ்த்திட்டு அவங்கவங்க வூட்டுக்கு போய் வயிறார சாப்பிடனும்னு சங்கத்து சார்புல வேண்டி விரும்பிக் கேட்டுக்கறோம்!!


தங்கள் நல்வரவை எதிர்நோக்கும் :

அனுசுயா
கண்மணி
காயத்ரி
இம்சையரசி
மை ஃப்ரண்ட்

Tuesday, August 21, 2007

ஜெ-வுடன் ஒரு பேட்டி

சங்கத்து ரிசப்ஷன்ல நல்லா தூங்கிட்டிருந்த நம்ம கவிதாயினி டக்குனு "யூ ஹேவ் அ நியூ மெயில்" னு கம்ப்யூட்டர்ல இருந்து சத்தம் வந்ததும் அலறி அடிச்சிக்கிட்டு எழுந்துக்கறாங்க.. வந்திருந்த மெயில பாத்ததும் அலறி அடிச்சிக்கிட்டு மத்த மக்கள் எல்லாரையும் கூப்பிட மொத்த சங்கமும் கவிதாயினி முன்னாடி ஆஜர்..

கண்மணி : ஏண்டி இப்படி அலறின??

கவிதாயினி : இங்க வந்து இந்த மெயில பாருங்க.. இன்னிக்கு ஜெ.ஜெ. மேடம்க்கு பிறந்தநாளாம். நம்ம சங்கத்து மக்களுக்கு போன்ல பேச அப்பாயிண்ட்மெண்ட் குடுத்திருக்காங்களாம்..

மை ப்ரெண்ட் : என்னது? நிஜமாவா?

ஜி3 : ஆஹா.. சூப்பர்.. இப்பவே போன போடுவோம்..

அனுசுயா : சரி.. சரி.. வாங்க போன் பண்ணலாம்.

இம்சை : ஒரு நிமிஷம்.. ஊர்ல இருந்து அப்பா கால் பண்றாரு.. நீங்க எல்லாரும் பேசிட்டிருங்க.. நான் இதோ வந்துடறேன்..

கவிதாயினி : சீக்கிரம் வந்துடு.

கண்மணி டீச்சர் ரொம்ப ஆர்வமாக மெயிலில் தரப்பட்டிருந்த நம்பருக்கு போன் பண்றாங்க.. ட்ரிங்.. ட்ரிங்...

அந்த பக்கம் : ஹலோ

கண்மணி : வணக்கங்க.. நாங்க ப.பா. சங்கத்துல இருந்து பேசறோம். ஜெ.ஜெ. மேடம் அவங்க கிட்ட பேச எங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் குடுத்திருக்காங்க..

அந்த பக்கம் : ஒ.. நீங்க தானா? மேடம் சொன்னாங்க.. உங்க கால் வரும்னு.. ஒரு நிமிஷம் லைன்ல இருங்க..

மை ப்ரெண்ட் : என்ன ஆச்சு? லைன்ல வந்துட்டாங்களா?

கண்மணி : இல்ல கூப்பிட போயிருக்காங்க.. வந்துடுவாங்க.. இரு ஸ்பீக்கர்ல போடறேன்..

ஜெ.ஜெ : ஹல்லோ. வணக்கம்.. நான் தான் ஜெ.ஜெ. பேசறேன்.

கண்மணி : வணக்கம் மேடம்.. எங்க சங்கத்து சார்பா உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

எல்லாரும் கோரசாக : இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடம்!!!

ஜெ.ஜெ : நன்றி.. நன்றி.. உங்க சங்கத்த பத்தி கேள்விபட்டப்போ ரொம்ப சந்தோஷமா இருந்துது. அதான் பிறந்தநாள் அதுவுமா உங்க எல்லார் கிட்டயும் பேசலாம்னு முடிவு பண்ணேன்..

கவிதாயினி : ரொம்ப சந்தோஷம் மேடம்.. உங்களுக்காக ஒரு பிறந்தநாள் வாழ்த்து கவிதை சொல்லட்டுமா மேடம்..

ஜெ.ஜெ : வேணாம்டா செல்லம்.. பிறந்தநாள் அதுவுமா என்ன அழவெச்சிடாத.. நீ கவிதை சொல்லாம இருந்தா என் பிறந்தநாள் பரிசா உனக்கு கோழிக்கால் சூப்பு அனுப்பி வைக்கறேன்..

கவிதாயினி : நீங்க நூறு வருஷம் நல்லா இருப்பீங்க மேடம்.. மறக்காம கோழிக்கால் சூப்ப அனுப்பிடுங்க..

மை ப்ரெண்ட் : அவ கெடக்கறா விடுங்க மேடம்.. ஒரு ராணியோட தோரணை உங்க கிட்ட தெரியுதே.. அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்..

ஜெ.ஜெ. : அது என்னோட குணம் அப்படி... எப்பவும் அடுத்தவங்கள அடக்கித்தான் பழக்கம்.. நான் யாருக்கும் அடங்கி பழக்கமே கிடையாது..

ஜி3 : [ஆஹா.. அராஜகப் பேர்வழியா இருப்பாங்க போல்ன்னு மனசுல நினைச்சுக்கிட்டே] மேடம் கவிதாயினி கவிதை சொல்லாம விட்டா கோழிக்கால் சூப் தர்றேன்னு சொன்னீங்களே.. அதே மாதிரி நானும் உங்கள கேள்வி கேட்காம விட்டா எனக்கு சிக்கன் பிரியாணி அனுப்புவீங்களா மேடம்?

ஜெ.ஜெ : நீ திருந்தவே மாட்டியா? ஆமா.. இப்போ நீ கேட்டதே ஒரு கேள்வி தானே.. அப்போ உனக்கு நான் சிக்கன் பிரியாணி குடுக்க வேண்டியதில்லையே..

ஜி3 (மனதிற்குள்) : அடடா.. கழுவுற மீன்ல நழுவுற மீனா இருக்காங்களே.. சரி.. கவிதாயினி சூப்ல கைய வைச்சிட வேண்டியது தான்..

அனுசுயா : மேடம் நீங்க ஏன் மேடம் கல்யாணமே பண்ணிக்கல??

ஜெ.ஜெ : நான் வரதட்சனைங்கற பேர்ல விலை குடுத்து வாங்கற மாப்பிள்ளை அந்த விலைக்கு தகுந்தவனா இருக்கனும்னு எதிர்பாக்கறேன்.. ஆனா இது வரைக்கும் அந்த மாதிரி யாருமே கிடைக்கலை.. அதான்..

இந்த வாக்கியத்தை கேட்டதும் நம் கண்மணி டீச்சரின் மூலையில் இது எங்கயோ கேள்விப்பட்ட பதிலா இருக்கேன்னு நினைச்சிக்கிட்டே வெளியில வர அங்க இம்சை அரசி போனில் ஜெ.ஜெ. மாதிரி பேசிக்கொண்டிருக்கிறார்.

கண்மணி : அடிப்பாவி.. இதெல்லாம் உன் வேலை தானா? அட என் அறிவு ஜீவி அப்ரண்டிசுகளா இங்க வந்து பாருங்க.. இவ்ளோ நேரம் நாம பேசினது இந்த இம்சை கிட்ட..

ஏமாந்த கலை முகத்தில வழிய அனைவரும் இம்சையை துரத்திக்கொண்டு ஓடுகின்றனர்..

எப்படியும் இம்சைக்கு பிறந்தநாள் அதுவுமா நல்ல பர்த்டே பம்ப்ஸ் உறுதி.. நேர்ல குடுக்க முடியாதத இப்படி கற்பனைல குடுத்துக்கறோம்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இம்சை அரசி.. உன் ஆட்சி இன்று போல் என்றும் நிலைத்து நிற்க வேண்டும் :))

Friday, August 17, 2007

ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்க்ஷன்.. - 3

இம்சை : கதை சொல்லு கதை சொல்லுனு சும்மா நச்சாதீங்கப்பா (அது தெரிஞ்சா சொல்ல மாட்டேனா? )
சரி, சொல்றேன் கேட்டுக்கோங்க. நைட் 12 மணி. க்ளாக்ல பெல் அடிக்குது. தூரத்துல நரி ஊளைவிடுது.

கண்மணி : அதெப்படி நடு சிட்டில நரி ஊளைவிடும்.

G3 : அதெல்லாம் அப்டிதான் எத்தனை சினிமால வருது அதெல்லாம் கேட்க மாட்டீங்க. இத மட்டும் கேளுங்க.

இம்சை : ம் அப்புறம் இந்த சத்தம் கேட்டு ஹிரோயின் திடுக்குன்னு முழிச்சுக்கறா. ஏதோ ஒன்னு அவ தொண்டை மேல சுறுசுறுனு ஏறுது.

மைபிரெண்ட் : அப்ப மியூசிக் தடதடனு அதிரனும் பாக்கறவங்க அதிரனும் சரியா

இம்சை : குட் கரெக்ட் இப்டிதான் பிக் அப் பண்ணனும்

G3 : சரி அப்புறம் என்ன சொல்லுங்க

இம்சை : அப்ப ப்ரெண்ட்டோட தம்ம திருட்டுதனமா எடுத்து அடிச்சிட்டு வீதில நடந்து போற நம்ம கதாநாயகன் சத்தம் கேட்டு காப்பாத்த வராரு வீட்டுக்குள்ள. அப்ப கதைவு சாத்தியிருக்கு அதை உடைக்கலாம்னு நம்ம ஹிரோ வேகமா ஓடி வராரு. அந்த கேப்ல ஒரு பெருச்சாளி ஓடி வந்து கதவு மேல முட்டி கதவு ஒடைஞ்சி போயிடுது. ஆனா இன்னும் நம்ம ஹீரோயினி கத்திட்டே இருக்காங்க.

கண்மணி : ஏன் கத்தறாங்க.

G3 : ம் கதவ உடைச்சா யாருதான் கத்த மாட்டாங்க ?

இம்சை : சொல்றேன் முழுசா கேளுங்க. அப்புறம் உள்ள வந்து ஹீரோயின் கழுத்துல இருந்து கஷ்டப்பட்டு தேடி ஒரு குட்டி எறும்ப எடுத்து கீழ விடுவாரு. இதனால நம்ம ஹீரோயினுக்கு அவன் மேல லவ் வந்திடுது. எப்டி என் இன்ட்ரோ சீன்

கண்மணி : சூப்பர் :)

மைபிரெண்ட் : என்ன கொடுமை இது இந்த படத்துல நான் நடிக்க மாட்டேன் போங்க.

இம்சை : ஏன் இந்த கதைக்கு என்ன குறை?

G3 : அதான இதுக்கு என்ன குறை?

மைபிரெண்ட் : என்ன கொடுமை ஒரு எறும்ப எடுத்து விட்டதுக்கெல்லாம் காதல் வருமா?

G3: ஆமா எத்தனை தமிழ் சினிமா பாத்திருப்போம் சும்மா கீழ விழுகறப்போ பிடிச்சா கூட காதல் வருதாமா? இதுல எறும்பு கடிக்காம காப்பத்தற ஹீரோ மேல காதல் வரதுல என்ன தப்பு?

மைபிரெண்ட்: சரி டூயட் இல்லயா? சும்மா கண்ண மூடுனா ஆஸ்திரேலியா அமெரிக்கானு போய் பாட வேண்டியதில்லையா?

அனுசுயா : என்னது ஆஸ்திரேலியா அமெரிக்காவா இதெல்லாம் பட்ஜெட்ல வராது. பேசாம சென்னை கூவம் பக்கத்துல எடுத்தாப் போதும்.

மைபிரெண்ட்: அய்யோ நாத்தம் தாங்காதே?

அனுசுயா : வேணும்னா ஆளுக்கு ஒரு மாஸ்க் வாங்கிக்கலாம்

இம்சை : சரி இந்த இடத்துல ஒரு பாட்டு வருது. எறும்பும் பெருச்சாளியயும் வெச்சு.

அனு : காயத்ரி நம்ம கதைக்கு ஒரு பாட்டு சும்மா சூப்பரா எழுதி குடும்மா

கவிதாயினி : ஆகா உங்க கதையில வர்ர எறும்பு, பெருச்சாளிக்கெல்லாம் என்னால பாட்டு எழுத முடியாது

அனு : இங்க பாரு நீ ரொம்ப பிகு பண்ணுனா நானே கவிதை எழுதி உன் பேர்ல பப்ளிஷ் பண்ணிடுவோம்

கவிதாயினி : அப்ப சரி அப்டியே எழுதிகோங்க ஆனா என் இமேஜ் ஸ்பாயில் ஆகாம பாத்துக்கோங்க

அனு : இமேஜ்னா Bmp, JPEG file தான.. அதெல்லாம் ஒன்னும் பண்ண மாட்டோம் டோன்ட் வொர்ரிமா :)

கவிதாயினி : அட கொடுமையே இப்டிலாம் நக்கல் பண்ணுனா நான் பாட்டு எழுத மாட்டேன் போங்க.

அனு : அதனால என்ன நாங்களே உன் பேர்ல எழுதிக்கரோம் :)

கண்மணி : பேசாம நீயே பாட்டு எழுதிடு.. கவிதாயினி எழுதினா அப்புறம் ஹீரோயினோட கண்ணீர தொடைக்க லாரி லாரியா டிஷ்யூ பேப்பர் வாங்க வேண்டி இருக்கும்.. உன் பட்ஜெட் தான் உதைபடும்..

அனு : அட ஆமா.. அத வேற மறந்தே போயிட்டேன்.. அப்போ நானே பாட்டு எழுதிடறேன்..

மை ப்ரெண்ட் : சரி பாட்டுக்கப்புறம் கதைய கண்டின்யூ பண்ணுங்கப்பா..

இம்சை : அடுத்து டூயட் முடிஞ்சதும் அப்படியே ஹீரோ அண்ட் ஹீரோயின் 2 பேரும் அடுத்தவங்க கண்ணையே பாத்துட்டிருக்காங்க.. திடீர்னு டமால்-னு ஒரு பயங்கர சத்தம்..

கவிதாயினி : அய்யய்யோ.. என்ன ஆச்சு??

இம்சை : ஹீரோ அப்படியே கண்ண சொருகிக்கிட்டு கீழ விழறாரு.. பாத்தா பின்னாடி ஹீரோயினோட அண்ணன் சித்தார்த் கையில ஒரு கட்டையோட கண்ணுல ஒரு கொல வெறியோட நிக்கறாரு..

மை ப்ரெண்ட் உடனே தரையில உருண்டு பொறண்டு அழறாங்க..

இம்சை : குட் இப்படித்தான் உணர்ச்சிப்பூர்வமா கதைய கேட்கனும்.. படத்துலயும் உன் ரியாக்ஷன் இது தான்.

கண்மணி : அட, கொஞ்சம் நல்லா பாருங்க.. அவ நிஜமாவே அழறா..

அனு : அய்யோ.. அடி கிடி பட்டுட போகுது.. பாத்து மா.. அப்புறம் இதுக்கு வேற நான் செலவு பண்ணனும் :-(

ஜி3 : எதுக்கு இப்படி நீ ஓவரா சீன் போடற??

மை ப்ரெண்ட் : என் சித்து எனக்கு ஹீரோவா போடாதது கூட ஓ.கே.. ஆனா அவரு எனக்கு.. எனக்கு.. ச்சே.. அந்த வார்த்தைய சொல்றதுக்கே எனக்கு பிடிக்கல :-((

நான் இந்த டிஸ்கஷன்ல இருந்து வெளிநடப்பு செய்யறேன்..

இம்சை, கவிதாயினி, ஜி3 அதிர்ச்சியில் உறைந்து நிற்க,

கண்மணி : ஹையா.. அப்போ ஹீரோயின் போஸ்டுக்கு போட்டியே இல்ல.. இனி நான் தான் ஹீரோயின் :)

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நம் ப்ரொட்யூசர் அனு, தலையில் கை வைத்து உட்கார்த்துவிடுகிறார்..

 

BLOGKUT.COM