Friday, June 22, 2007

மளிகை கடையா? டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரா?

வணக்கம் மக்கா..

கதை எழுதியாச்சு.. அனுபவம் எழுதியாச்சு.. சீரியலா பதிவும் போட்டாச்சு!! நெக்ஸ்டு என்னன்னு கேக்குறசங்களுக்கு இதோ புதுசா டெம்ப்ளேட் மாற்றி புதுசா விவாத கும்மி ஒன்னு ஆரம்பிச்சிச்சிருக்கோம். சும்மா பேரை கேட்டதுமே அதிருதுல்ல? அது!!!!

கும்மிக்கு தேவையான அடிப்படை தகுதி பதிவை படிக்காததுன்னு அபி அப்பா ரூல்ஸ் போட்டாலும், அவர்தான் ஃபர்ஸ்ட்டா பதிவை படிச்சுட்டு வருவார்ன்னு தெரியும்.. அதனால், கும்மிக்கு எதுக்கு தலைப்புன்னு நீங்க கேட்டாலும் தலை இல்லாமல் வால் (குட்டி பிசாசே, உன்னை இல்ல) ஆடாதுங்கிற காரணத்தால இதோ இன்றைய கும்மியின் தலை(ப்) பூ.

வீட்டுக்கு வேண்டிய பொருட்கள் வாங்க மளிகை கடைக்கு போனால், நாம் கையில ஒரு லிஸ்ட்டை தூக்கிட்டு போய் "அண்ணாச்சி, லிஸ்ட்டுல இருக்கிற ஐயிட்டமெல்லாம் கட்டிக் கொடுங்க"ன்னு சொல்லிட்டு பக்கத்துல இருக்கிற டீக்கடையில தம் அடிக்கிறது, டீ குடிக்கிறது, ரோட்டுல போற பொண்ணுங்கள சைட் அடிக்கிறதுன்னு பையனுங்க ஒரு பக்கம் இருக்க.. இதே பொண்ணுங்கன்னு பார்த்தா அவங்களும் ரோட்டுல போற பையனுங்களைகொஞ்ச நேரம் சைட் அடிச்சுட்டு இருப்பாங்க.. கடைகாரர் சாமான்களை கட்டி முடிச்சதும், "என்ன அண்ணாச்சி.. சௌக்கியமா? வீட்டுல மாமி எப்படி இருக்காங்க? பக்கத்து வீட்டு சரோஜா எதுத்த வீட்டு கண்ணனோடு ஓடிட்டாலாமே?"ன்னு ஃப்ரண்ட்லியா பேசுவோம்.

இதுவே இப்போ மழைக்கு பிறகு முளைச்ச காளான் மாதிரி ஆங்காங்கே இருக்கிற டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்ல கதையே வேற. இங்கே நுழைவாசலிலேயே தள்ளு வண்டி ஒன்னை வச்சிருப்பாங்க. அதை உருட்டிட்டே போய் நமக்கு வேண்டிய பொருட்களை தேடி கண்டுபிடிக்கணும் (என்ன கொடுமை இது கொடி?). ஆனால், இப்போ திரும்ப யோசிச்சு பார்த்தா, இங்கே போகும்போது மட்டும் நாம் ஏன் லிஸ்ட்டு எடுத்துட்டு போறதில்லை.. கண்டிப்பா டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்க்கு போய் சேர்ந்ததும் வாங்க வேண்டிய சாமான்கள் என்னன்னு ஞாபகம் இருக்காது! ஆனா பந்தாவா வண்டியை உருட்டிட்டு தேடிக்கிட்டே போவோம்.. வாங்க வேண்டிய லிஸ்டுல இல்லாத சாமான்கள் அப்போதான் பளிச் பளிச்ன்னு கண்ணை கூசும்.. அதையெல்லாம் அள்ளிப்போட்டு வாங்க வேண்டிய சாமான்களில் ஒன்னு ரெண்டு மட்டுமே வாங்குவோம். சிலர் பேர் வாங்க வேண்டிய சாமான்களில் ஒன்னு கூட வாங்காம, பர்ஸை காலி பண்ணிட்டு போன கதை கூட இருக்குங்க. கேஷர் நாற்காலியில யூணிஃபார்ம் போட்ட ஒரு பொண்ணோ பையனோ வேலையில இருப்பாங்க.. டக் டக்ன்னு மெஷின்ல தட்டுவாங்க.. மிஷின்ல தெரியிற பில்லை செட்டல் பண்ணிட்டு பையை தூக்கிட்டு வந்துடுவோம்.. மளிகை கடை அண்ணாச்சிக்கிட்ட பேசின மாதிரி ஏன் டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் கேஷர் கிட்ட பேச மாட்றோம்? (கேஷர் பொண்ணுங்களை சைட் அடிக்கிற இளைஞர்கள் இதுல சேர்த்துக்கப்படாது சொல்லிட்டேன்..)

இதுல இருந்து உங்களுக்கே புரிஞ்சிருக்கும். மளிகை கடையில் இருக்கும் அந்த அன்னியோன்யமும், நெருக்கமும் ஏன் டிப்பார்மெண்டல் ஸ்டோர்ல இல்ல? இப்போ உங்க சாய்ஸ்: மளிகை கடையா டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரா? (மளிகை கடை அண்ணாச்சியின் பொண்ணா டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரின் கேஷர் பொண்ணான்னு நான் கேட்கல மின்னல்..அதுக்குள்ள மின்ன ஆரம்பிச்சிட்ட மாதிரி இருக்கு?) உங்க சாய்ஸ் என்னன்னு சொல்லி அதுக்கு உங்க கருத்துக்களையும் (கும்மின்னு படிச்சாலும் தப்பே இல்ல) அள்ளி தெளிங்க..

ஸ்டார்ட் மியூஜிக்... நீங்க அடிக்கிற கும்மியில இங்க இருக்கிற ட்ராஃபிக்கே கிளிஞ்சு தொங்க வேண்டாமா?

பி.கு: ப.பா சங்கத்துல புதுசா ஒரு பொட்டி திறந்திருக்கோம்ங்க. இந்த வாரத்துல சிறந்த காமெடின்னு உங்க பதிவிலிருந்தே ஒன்னு தேர்ந்தெடுத்து "காமெடி சிற்பி"ன்னு ஃப்ரேம் போட்டு கௌரவிக்க போறோம்.

பி.குக்கு பி.கு: இந்த வாரம் "காமெடி சிற்பி" அம்பி இப்போ மின்னுராரு! ;)

பி.குக்கு பி.குக்கு மு.கு: இந்த வாரம் நீங்க இல்லையா? அட!! அடுத்த வாரம் நீங்கதாங்க! ;)

Saturday, June 16, 2007

பியூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ் - 5

ஹாய்.. ஹாய்.. ஹாய்! எப்படி இருக்கீங்க எல்லாரும்? சங்கத்து பி.ஆர்.ஓ ஆகி எந்த பிரச்சினைன்னாலும் அணுகலாம்னு ஓபனா அறிக்கை விட்டதுல இருந்து நம்ம பாடு திண்டாட்டமாகிப் போச்சுங்க. :( "பின்லேடனைப் பிடிக்க ஒரு வழி சொல்லுங்கன்னு புஷ் கண்ணீரும் கம்பலையுமா மெயில் அனுப்பிருக்கார். நம்மூர்ல சாம்பார்ல உப்பு கொறஞ்சா கூட சங்கத்துல வந்து கம்ப்ளெய்ண்ட் பண்றாங்க! ம்ம்.. பிரபலம்னாலே இப்டி ப்ராப்ளம் இருக்கத்தான் செய்யும். அதுக்காக கடமைய விட முடியுமா? சரி வாங்க.. பியூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ்க்குப் போவோம்!

அது ஒரு அழகிய நிலாக்காலம்! (ஹிஹி. ஃப்ளாஷ் பேக் போறமுல்ல!) என் அக்கப்போர் தாங்காம என்னையும் 3 வருஷம் ஜெயில்ல போட்ருந்தாங்க அப்போ! அதாங்க.. ஹாஸ்டல்ல. எங்க காலேஜ், ஹாஸ்டல் எல்லாத்துக்கும் ஹிட்லரே ரூல்ஸ் போட்டாப்பல... அவ்ளோ ஸ்ட்ரிக்ட். மாடர்ன் டிரஸ் போடக்கூடாது, பசங்க பொண்ணுங்க பேசிக்க கூடாது, அங்கங்க நின்னு அரட்டை அடிக்கக் கூடாதுன்னு ஏகப்பட்டசட்டதிட்டங்கள்! இது எல்லாத்த விட என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குன விஷயம் ஹாஸ்டல்ல என்.வி கிடையாதுங்கிறது தான். நான் பறக்கறதுல ஏரோப்லேனையும் மிதக்கறதுல கப்பலையும் நடக்கறதுல மனுஷனையும் விட்டுட்டு மிச்ச எல்லாத்தயும் திங்கறவ. என்னைக் கொன்டு போய் இப்டி ஒரு ஹாஸ்டல்ல விட்டா? (அவ்வ்வ்வ்.. இப்ப நினச்சாலும் அழுவாச்சியா வரு்து) :(

நாக்கு செத்துப் போய அதை அடக்கம் பண்ற நிலைமை வர்ரதுக்குள்ள நானும் ராதிகாவும் (என் உயிர்த்தோழி!) சேர்ந்து, அங்க வேல செய்யற யாருக்காச்சும் லஞ்சம் குடுத்து சரிக்கட்டினா சிக்கன கண்ல பாக்கலாம்னு கண்டுபிடிச்சோம்! அப்டி மாட்டினவங்க தான் டயானா பாட்டி! (ஹிஹி.. இளவரசி டயானா மாதிரியே ஹேர்ஸ்டைல் அவங்களுக்கு) எல்லாம் கச்சிதமா ப்ளான் பண்ணி, குடுக்குற காசுல அவங்களுக்கு 20% னு பிசினஸ் பேசி... வாங்கிட்டு வரச் சொல்லி சிக்கன் பார்சலும் ரூமுக்கே வந்தாச்சு! அப்புறம்தான் பிரச்சினையே!

ரூம்ல பார்சல ஓபன் பண்ணினா... வாசம் காட்டிக்குடுத்துடும். பக்கத்துலயே நம்ம கிரைண்டர்... அதாங்க வார்டன் ரூம் வேற. (ஹாஸ்டல் அசெம்பிளில அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சாங்கன்னா நான்ஸ்டாப்பா கிர்ர்ருன்னு கிரைண்டர் ஓடற மாதிரியே சத்தம் கேக்கும்!!) இரண்டாவது ரூம்ல கூட இருக்குற இன்னொருத்தி (ஜோதி) எட்டப்பன் வம்சாவளில வந்தவ! அவ எதும் உளறி வெக்காம இருக்கனும். அதனால ஆக்கப் பொறுத்தோம்.. ஆறப் பொறுக்க மாட்டமான்னு கம்னு இத்துப் போன இட்டிலிய சாப்பிட்டு படுத்துட்டோம். 10 மணிக்கு ஊரடங்கி எல்லாரும் தூங்க ஆரம்பிச்ச பெறவு ஜோதிகிட்ட யார்கிட்டயும் சொல்லாதேன்னு சத்தியம் வாங்கிகிட்டு பார்சல எடுத்துகிட்டு மொட்ட மாடிக்கு போனோம். (8 மணிக்கு மேல மொட்டமாடிக்கு போகக் கூடாதுன்னு ரூல்ஸ்! சட்டத்தையெல்லாம் நாம்ப என்னிக்குங்க மதிச்சோம்?)

போய் இருட்டுல த்ட்டு தடுமாறி உக்காந்து லெக்பீஸ கைல எடுத்தா ரொம்ப நாள் பாக்காத ஃப்ரண்ட பாத்த மாதிரி ஆனந்தக் கண்ணீர் வருது. நான் அதை கைல வெச்சிட்டு "ஆட்டுக்கு நாலு கால்.. மாட்டுக்கு நாலு கால்.. ஏன் பூச்சிக்கு கூட எட்டுக்கால் படைச்ச ஆண்டவன் கோழிக்கு ரெண்டே ரெண்டு கால் மட்டும் குடுத்துட்டானேஏஏ..."ன்னு நடிகர் திலகம் மாதிரி ஃபீல் பண்ணிகிட்டு இருக்கும் போது தான் கவனிக்கிறேன் ராதிகா அப்டியே பேயடிச்சாப்பல உக்காந்திருக்கா. என்னாடின்னு அவ பாக்கற திசைல பாத்தா மூலைல தண்ணி டேங்க் பின்னாடி இருந்து வெள்ளையா.. புகை புகையா கிளம்புது. டேங்க்குக்கு நேரா கீழ இருக்குற ரூம்ல ரெண்டு வருஷம்முன்னாடி
ஒரு பொண்ணு தூக்கு போட்டுகிச்சின்னு சீனியர்ஸ் சொன்னதெல்லாம் நியாபகம் வந்து படுகலவரமாய்டுச்சு எங்களுக்கு. 3 பேரும் ஓடறதுக்கு ரெடி ஆனோம். அந்த நேரம் கரெக்ட்டா புகைக்குள்ள இருந்து ஒரு உருவம் எந்திரிக்குது... வாயெல்லாம் வேற சிவப்பா இருக்குது! பாத்தவுடனே பயத்துல பாதி உசிர் போய்டுச்சி. நானும் ராதிகாவும் வுட்டா போதும்னு ஓடரோம். ஜோதி எருமை மாடு... நிறைய தமிழ் சினிமா பாத்த எபக்ட்ல பொறங்கைய வாயில வெச்சி ஸ்டைலா 'வீல்' னு சவுண்டு விட்டுட்டே ஓடி வர்றா மடப்பய மவ! அலறியடிச்சு தபதபன்னு கீழ இறங்கினா... என்னமோ நாங்க ஃப்லைட்ல வந்து இறங்கிற மாதிரி ஹாஸ்டலே திரண்டு எங்களை ரிசீவ் பண்ண நிக்குது. கிரைண்டர் வேற ஓட ஆரம்பிச்சிடுச்சு!

நானும் ராதிகாவும் தலை குனிஞ்சு நிக்க... (தப்பு பண்ணினா அப்டிதான் நிக்கனும். அப்பதான் தண்டனையோட வீரியம் குறையும்!!) ஜோதி கீழ உக்காந்து கிடுகி்டுன்னு நடுங்க... அவசரமா உண்மை கண்டறியும் குழு ஒன்னு கிளம்பி மாடிக்கு போச்சு. அவங்க தாக்கல் செஞ்ச அறிக்கை மூலமா நாங்க சிக்கன் வாங்கின உண்மை ஹாஸ்டலுக்கும்.. நாங்க பாத்த உருவம் கொள்ளிவாய் பிசாசு இல்ல.. வீணாப்போன டயானா பாட்டி தான் அங்க உக்காந்து சுருட்டு குடிச்சிட்டு இருநதுதுங்கிற உண்மை எங்களுக்கும் தெரிய வந்துச்சு. ஒரே அவமானமாப் போச்சு!

மறுநாள் மேட்டர் எல்லாப் பக்கமும் பரவி ஹாஸ்டல்ல டிசிப்லின் மெய்ண்டெய்ன் பண்ணலன்னு கிரைண்டரை மாத்திட்டு புது வார்டன் போட்டுட்டாங்க. எங்களுக்கு அன் டைம்ல மாடிக்கு போனதுக்கு ஆளுக்கு 50 ரூபா ஃபைனும் அரை மணி நேர அட்வைசும் பனிஷ்மெண்ட்! (இப்டி எல்லாம் பண்ணினா திருந்திடுவோமா?) எப்டியோ கிரைண்டர ஒழிச்சாச்சுன்னு சந்தோஷம். ஆனா ஜோதி மட்டும் என்ன சொல்லியும் கேக்காம கே.பி.சுந்தராம்பாள் மாதிரி நெத்தில திருநீறு பூசிகிட்டு அவங்கம்மா கூட ஊருக்கு போய்ட்டா. பாவம் புள்ளைக்கு ஒரு வாரம் ஜொரமாம்! திரும்பி வந்தும் எங்க கூட இருக்க மாட்டேன்னு வேற ரூம் மாத்திகிட்டா! நீங்களே சொல்லுங்க எங்க மேல என்னங்க தப்பு?

Friday, June 15, 2007

ப்யூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ் - 4

ப்யூட்டிஸ் அடிச்ச லூட்டிஸ் ஒரு சீரிஸா போயிட்டு இருக்கு.. சரி நாமும் அதுல ஒரு பகுதி எழுதலாம்ன்னு கம்யூட்டர் முன்னுக்கு உட்கார்ந்தா எதை முதல்ல எழுதுறதுன்னே தெரியல.. காலேஜ்ல அடிச்ச லூட்டி, ஹாஸ்ட்டல்ல அடிச்ச லூட்டின்னு எக்கச்சக்கமா இருந்தாலும், அதுக்கு முன்னவே ஸ்கூல்ல படிக்கும்போதே அடிச்ச லூட்டிகளே கரை புரண்டு ஓடுதே! அதுல ஒன்னு ரெண்டு சொல்லுவோமே..

மலேசியால Form 4 (படிவம் 4) வருடத்தை ஹனிமூன் யியர் (year)ன்னு சொல்வாங்க.. நாமளும் ஒரு வருடம் மஜாவா ஆட்டம் போடலாம்ன்னு சந்தோஷமா முதல் நாள் வகுப்புக்கு போனதும்தான் தெரியுது!!! அந்த வருடம் மட்டும் ஹனிமூன் யியர் எங்களுக்கில்லை.. எங்க வகுப்பு டீச்சர்ஸ்க்குதான்னு.. :(

விடுவோமா நாங்க.. ஆரம்பிச்சிட்டோம்ல லூட்டியை..

என் வகுப்பாசிரியர் வந்த ரெண்டு வாரத்துலேயே மெக்காவுக்கு போரேன்னு கிளம்பிட்டாங்க.. நல்ல டீச்சர்தான். ஆனால், எங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ண அவங்களுக்கு கொடுத்து வைக்கலை.

நெக்ஸ்ட்டு, எங்க மலாய் டீச்சர்.. கர்ப்பமா இருந்தாங்க. ஆனாலும் பாடம் நடத்தியே ஆவேன்னு ஒரே அடம்.. ஒரு நாள் க்லாஸுக்கு வந்துட்டு,

டீச்சர்: இன்னைக்கு நாம் ஹாங் துவா காலத்துல நடந்த ஒரு ராஜா கதையை சொல்லி தர்ரேன்..

பாட புத்தகத்தை பார்த்து என்னமோ சொல்லிக்கிட்டிருந்தாங்க.. ஒரு சில நிமிடங்கள் கழித்து (அவங்க பேசுற சத்தத்தை பொறுக்காமல்), நான் எழுந்தேன்..

நான்: டீச்சர், நான் பள்ளி அலுவகத்துல உங்களை பத்தி கம்ப்ளேன் பண்ண போறேன்..

டீச்சர்: ஏன்? நான் உங்களுக்கு பாடம்தானே சொல்லிக்கொடுக்கிறேன்.

நான்: இல்லை.. நீங்க க்லாஸுல அரசியல் சொல்லி தர்றீங்க

டீச்சர்: நான் அரசியல் சொல்லித்தந்தேனா? எப்போ?

நான்: இதோ இப்ப சொன்னீங்களே! அரசியல்ன்னு.. சாட்சிக்கு இங்கே 40 பேர் இருக்கோம். எல்லாரும் சேர்ந்து கையெழுத்து போட்டா, உங்க வேலை அம்பேள்!!

டீச்சர்: ஐயய்யோ!!! அப்படியெல்லாம் ஒன்னும் பண்ணிடாதேம்மா.. நான் வேறு ஏதாவது பாடம் தர்றேன். மாண்வர்களே, இன்னைக்கு நான் கொடுக்கிற ஒரு தலைப்புல ஒரு அறிக்கை எழுதுங்க. ஒரு க்ரூப்ல நாலு பேர்..

வைட் போர்ட்டுல ஒரு தலைப்பை எழுதிட்டு அவங்க ஒரு ஓரமா போயிட்டு உட்கார்ந்துட்டாங்க. 15 நிமிடங்கள் கழிச்சு நாங்க எல்லாரும் பேப்பரை டீச்சர் கிட்ட கொடுத்தோம்.. பார்த்ததும் அவங்களுக்கு மயக்கம் வராத குறைதான்..

எந்த பேப்பரிலும் நாங்க ஒன்னுமே எழுதலை. ஆனா கலர் கலரா பேப்பர் மட்டும் அனுப்பியிருந்தோமாக்கும்.. டீச்சர் இது என்னனு கேட்க, நாங்க ஒவ்வொருத்தரும், இது வெள்ளை அறிக்கை.. பச்சை அறிக்கை.. சிவப்பு அறிக்கைன்னு சொல்ல..

அன்னைக்கு க்லாஸை விட்டு வெளியேறினவங்கதான்.. அன்னைக்கே பிரசவ வலி வந்து ரெண்டு மாதம் லீவு!!

அடுத்தது நாங்க விரட்டியது எங்க கணித டீச்சரை.. அதுல என் தப்பு ஒன்னுமே இல்லைங்க. எல்லாமே அவங்க தப்புதான்.. பரிட்சை வச்சாங்க.. நாங்களும் செஞ்சு அனுப்பினோம். உங்களுக்கே தெரியும்.. படிக்கிறதும் பரிட்சை எழுதுறதும் எவ்வளவு கஷ்டமான வேலைன்னு..

சோடா பொட்டி கண்ணாடி போட்ட அந்த டீச்சர் ஒரு வாரம் கழிச்சு பரிட்சை தாளை திருத்தி எங்களிடம் கொடுத்தாங்க.. ஆனால், என் தாளை மட்டும் தரல.. நான் கடுப்பாகி டீச்சர் கிட்ட போய் கேட்டேன்..

நான்: டீச்சர், என் தாள் எங்கே?

டீச்சர்: எங்கிட்ட உள்ள தாள் எல்லாத்தையும் கொடுத்துட்டேனே! நீ பரிட்சைக்கு வரலை போல..

நான்: டீச்சர், விளையாடாதீங்க.. இப்ப நீங்க என் பேப்பரை தரலைன்னா, பின்னால நடக்கப்போற விபரீதத்தை நீங்க சந்திச்சே ஆகனும்!! ரெடியா?

டீச்சர்: சாரி சாரி.. என் பேக்ல ஒரு பேப்பர் மாட்டிகிட்டு இருக்கு.. நாந்தான் கவனிக்கல.. இந்தா!!

நான்: பரவால பரவால.. மன்னிச்சிட்டேன்..

என் பேப்பரை வாங்கி திரும்பி என் மேஜைக்கு வந்து சேர்ந்ததும்தான் கவனித்தேன். என் பேப்பரை கோழி கறி சாப்பிட்டதா? இல்ல கோழி கறி என் பேப்பரை படிச்சதான்னு புரியல.. பேப்பர் முழுசும் கறி ஊத்தியிருந்துச்சு!

திரும்ப டீச்சர் கிட்ட போயி சண்டை போட்டேன். ஒரு வாரம்! ஒரே வாரம்! அவங்க பயந்து வேற ஸ்கூலுக்கே மாறி போயிட்டாங்க.. (சண்டை எப்படியிருந்துச்சு கேட்டுடாதீங்க.. ஹீஹீ)

அப்புறம் என் பயலோஜி டீச்சர்.. க்ளாஸுக்கு வந்தவுடன் வைட் போர்ட்டுல எழுத ஆரம்பிச்சாங்கன்னா மணி அடிக்கிற வரைக்கும் எங்களை திரும்பிகூட பார்க்க மாட்டாங்க. அவங்க வேலையில அவ்வளவு கண்ணும் கருத்துமா இருப்பாங்க. அவங்க அவங்க வேலையை வகுப்பு முன்னாடி செய்ய, நாங்க எங்க வேலையை பின்னால செஞ்சுட்டு இருப்போம்.

இவங்களால எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.. அதனால அவங்க "வேலை"யை செய்யட்டும்.. ஃப்ரீயா விட்டுடலாம்ன்னு விட்டுட்டோம். :D

கெமிஸ்ட்ரி டீச்சர் வந்தாலே க்ளாஸ் போர்.. அவங்க என்ன சொல்லி தர்றாங்கன்றது அவங்களுக்கே தெரியாது! ஸ்டூடண்ட்ஸ் எங்களுக்கு மட்டும் புரிஞ்சிடுமா என்ன!! ஹீஹீ.. ஸோ, எப்போதுமே அவங்க க்ளாஸுல அவங்கல கலாய்ச்சிட்டே இருப்போம்..

என்ன சொல்லிக்கொடுத்தாலும், "டீச்சர், அது தவறு.. சரியான பதில் இப்படி வரும்"ன்னு ஏதாவது சொல்வோம்.. சில சமயம் சரியா சொல்லிக்கொடுத்தாலும் அது தப்பு தவறுன்னே சொல்லி அவங்களை கொழப்பிடுவோம். 2 வார க்ளாஸுக்கு பிறகு, எங்க க்ளாஸ் டைம்டேபல் வரும்போது ஏதாவது காரணம் சொல்லி ஸ்கூலுக்கே வர மாட்டாங்க அவங்க.. அடுத்ததும் அவுட்டு!

யார் வந்தாலும் விட்டு வைக்க மாட்டோம்ன்னு தெரிஞ்சே ஆரம்பத்திலேயே எங்களுக்கு இங்க்லீஸ் டீச்சர் இல்ல..

சரித்திர க்ளாஸுல டீச்சர் க்லாஸுல என்ன பண்ணிட்டிருப்பாங்கன்னு எங்க யாருக்குமே தெரியாது.. ஏன்னா, அவங்க க்ளாஸுக்கு வர்றதுக்கு முன்னவே நாங்க க்ளாஸை விட்டு வெளிநடப்பு செஞ்சுடுவோம்.. கௌரவமா வகுப்பு கட் அடிப்போம்ன்னு சொல்றேன். ஹீஹீ..

இப்படி ஒவ்வொருத்தவங்களையும் துரத்தி விட்டாச்சு.. சும்மாவா!! ஹனிமூன் யியர்.. ஹனிமூன் யியரா இருக்கணும்ன்னா இவங்க யாரும் இருக்க கூடாதுல..

இதை படிக்கிறவங்க நாங்க அகராதி பிடிச்ச மாணவர்கள்ன்னு நினைக்கலாம்.. அப்படி இல்லை இல்லை இல்லைன்னு சொல்ல இன்னொரு க்லாஸ் பேலன்ஸ் இருக்கு. அதுதான் பிஸிக்ஸ் அண்ட் அட்டிஷனல் மேத்தமதிக்ஸ் க்ளாஸ்.

நாங்க எல்லா டீச்சரையும் துரத்தினாலும், இவங்க கிட்ட மட்டும் அடங்கியிருப்போம்.. எங்கே போனாலும் இவங்க க்ளாஸுக்கு சரியா வந்து சேர்ந்திடுவோம். அற்புதமான டீச்சர். ஆரம்பதுல அட்டிஷனல் மேட்ஸ் சொல்லிக்கொடுத்தவங்க.. 2 மாதத்துல பிஸிக்ஸையும் டேக் ஓவர் பண்ணாங்க..

நாங்க ஒவ்வொரு டீச்சரையும் தொரத்தும் போதும் எங்களுக்கு சப்போர்ட்டா இருந்தவங்க. ஏன்னா நாங்க என்ன பண்ணாலும் அதுல ஒரு அர்த்தமும் நியாயமும் இருக்கும்ன்னு நம்புறாங்க. ஒரு காலத்துல பள்ளி நிர்வாகத்தையே எதிர்த்து நின்னு நாங்க போராடும்போது, எங்களுக்கு ஆதரவா எங்க பக்கம் நின்ன ஒரே டீச்சர் இவங்கதான்.

ஸோ, மோரல் ஆஃப் தி ஸ்டாரி என்னன்னா பிடிக்காத டீச்சரை வெளியே துரத்துங்கள். உங்களை அறிஞ்சவங்களை பக்கத்துல வச்சிக்கிட்டு அவங்க கிட்ட படிங்க.. வாழ்க்கையில கண்டிப்பா பிற்காலத்துல வெற்றி பெருவீங்க. :D

Thursday, June 14, 2007

ப.பா. சங்கத்தின் புதிய பி.ஆர்.ஓ!!

ஹாய்.. மக்காஸ்.. அண்ட் மக்கீஸ்..

வணக்கம்! சிவாஜி - The Boss இந்தா இன்னிக்கு வறேன்.. நாளைக்கு வறேன்.. இதோ வந்துகிட்டேயிருக்கேன்னு ஒரு வழியா நாளைக்கு வரப்போகுது. ஊர் உலகம் முழுக்க இது பண்ணிட்டிருக்கிற அலப்பறைகளுக்கு நடுவுல அதுக்கு கொஞ்சம் கூட குறையாம வலையுல தமிழ் நெஞ்சங்கள் மனசை குடைஞ்சிட்டிருக்கற கேள்வி ப.பா சங்கத்தோட புதிய பி.ஆர்.ஓ யாருங்கிறது தான்னு நேத்து பி.பி.சி, சி.என்.என்., என்.டி.டிவி ன்னு எல்லா சேனல்லயும் கருத்துக் கணிச்சு போட்டாங்க! (பாக்கல?)

அதுலயும் சங்கத்தோட ஆபீஸ பாத்து ஆடிப்போயிருக்கிற எதிரணி மண்டைல ஏதோ ஒரு மூலைல இருக்கிற மூளைக்கு திடீர்னு வேலை குடுத்து பாத்தும் கண்டுபிடிக்க முடியாம யார் அந்த ஆல் இன் ஆல் அழகு ராணின்னு கண்டுபிடிக்க உளவுப்படை அமைச்சிருக்காங்களாம்!

எங்க தலைவி கூட சொன்னாங்க... "ஒரு அறிமுகக்கூட்டம் நடத்தி முன்ன மாதிரியே விருந்து குடுத்திருவோம். சோறு போடறேன்னு சொன்னா எல்லா பயலுவலும் ஓடி வந்துருவாய்ங்க! உங்களுக்கு கட்- அவுட் வெச்சி.. கைல வீரவாள் (வால் இல்ல) குடுத்து... பொன்னாடை அணிவிச்சு 'தங்கத்தாரகை' 'பயமில்லாப் பாவை' 'பாயும் பெண் புலி' 'கற்பூரச் சொற்கோ' 'கவிதாயினி' அப்பிடின்னெல்லாம் பட்டம் குடுத்து உங்கள அறிமுகப்படுத்தரேன்னு"
(ஹிஹி.. எல்லாம் அவங்க சொன்னது தான்!! எனக்கு பப்ளிசிட்டியே பிடிக்காது!!!) அவங்களோட சேர்ந்து கலக...ச்சீ.. கழக உடன்பிறப்புகளும் இதெயே சொல்லி ரொம்ம்ம்ம்ப வற்புறுத்துனாங்க!

நாந்தான் "நோ நோ... அதெல்லாம் வேனாம்.. நான் ஏழைப்பங்காளி.. எளிமையே என் தாரக மந்திரம்" ன்னு சொல்லிட்டேன். (நான் சின்னதுல இருந்தே இப்டிதான்.. யாரும் ஃபீல் பண்ணாதீங்கப்பா!)

ஆகவே மகாஜனங்களே! இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்.... பயமில்லாப் பாவையர் சங்கத்தின் மற்றுமொரு பாவையாக மாண்புமிகு மக்கள் தொடர்பு அதிகாரியாக இன்று பொறுப்பேற்றுக் கொள்வது உங்கள்..


காயத்ரி
காயத்ரி
(இது எக்கோ! கண்டுக்காதீங்க)
பேரக் கேட்டா சும்மா அதிருதி'லே!
ஆகவே மக்களே... இனிவரும் காலங்களில் சங்கத்தை தொடர்பு கொள்வது, நன்கொடை வசூலிப்பது, பின்னூட்டத்துல கும்மி அடிக்கிறது, பதிவுல உப்புமா கிண்டறது, எதிரணியோட நல்லுறவு வளர்க்கிறது, பருவமழை பெய்யாம போறது, பெட்ரோல் விலையேற்றம், திருட்டு விசிடி பிரச்சினை, காவிரி பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை, எல்லை தாண்டிய பயங்கர வாதம், அல்கொய்தாவை அடக்கும் வழிமுறைகள்........
இப்படி என்ன மாதிரியான பிரச்சினையா இருந்தாலும் சங்கத்தோட ஆதரவு வேணும் னா மாண்புமிகு பி.ஆர்.ஓ ஆகிய என்னை அணுகும்படி கழுத்தில கத்தி வெச்சு அன்புடனும் பணிவுடனும் கேட்டுக் கொல்கிறேன்.. சாரி கொள்கிறேன்.!
இது வெறும் ஆரம்பம் தான்! ஆட்டம் இனிமேதான் இருக்கு!
வெகு விரைவில் எதிர்பாருங்கள்! பியூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ் பார்ட் - 4
உங்கள் அபிமான ப.பா.சங்கப் பதிவில்....

Monday, June 11, 2007

ப்யூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ் - 3

மக்கள்ஸ் எல்லாரும் அவங்க ஹாஸ்டல்ல பண்ண லூட்டீஸ சொன்னாங்க.. நமக்கு தான் ரொம்ப நல்ல மனசாச்சே.. ஹாஸ்டல்ல நாம போய் சேந்துட்டா வீட்ல இருக்கறவங்க எல்லாம் நிம்மதியா இருந்துடுவாங்களே.. அதுக்கு நாம காரணமாயிட கூடாதுன்னு நல்லெண்ணத்துல சென்னையிலேயே கல்லூரி படிப்ப முடிச்சிட்டோம்.. சரி.. ஹாஸ்டல் லூட்டிய போட தான் வழியில்லை.. அதுக்காக பதிவு போடாம உங்கள நிம்மதியா இருக்க விட முடியுமா சொல்லுங்க? அதான் ஆபீஸ்ல அடிச்ச லூட்டிய போட வந்துட்டேன்..

*************************************************

கௌதம் - இவன் வீடு சத்யம் தியேட்டர் பக்கத்துல. நாங்க எப்போ படம் போகனும்னாலும் அய்யாதான் டிக்கட் ரிசர்வ் பண்ணுவாரு.

நான் : டேய் கௌதம், இந்த வாரம் சனிக்கிழமை மேட்னி ஷோ "Main Hoon Na" படத்துக்கு 3 டிக்கட் வேணும். இன்னிக்கு ரிசர்வ் பண்ணிடறியா?

கௌதம் : கேக்கறது ஹெல்ப்பு.. அதை பவ்யமா கேக்க தெரியாதாக்கும் அம்மணிக்கு? ஒழுங்கா பவ்யமா "அண்ணா டிக்கெட் ரிசர்வ் பண்ணி தாங்கண்ணா"ன்னு கேளு. இல்லாட்டி ரிசர்வ்லாம் பண்ண முடியாது.

நான் : என்னது அண்ணாவா? அதுக்கு வேற யாரையாவது பாரு.. உன்னால டிக்கெட் ரிசர்வ் பண்ணி தர முடியுமா? முடியாதா?

கௌதம் : முடியாது.

நான் : சரிதான் போடா.. நாங்களே பாத்துக்கறோம்.

கௌதம் : நான் ரிசர்வ் பண்ணி தராம் நீங்க எப்படி படம் பாக்கறீங்கன்னு பாக்கலாம்.. கடைசி நேரத்துல போனாலாம் டிக்கெட்டு கிடைக்காது.

நான் : பாக்கலாம்.. நீ டிக்கெட் ரிசர்வ் பண்ணித் தராம நாங்க அந்த படம் பாத்துட்டு வர்றோம்.

கௌதம் : நீங்க மட்டும் அப்படி பாத்துட்டா அடுத்து வர்ற மாதவன் படத்துக்கு டிக்கெட் செலவு என்னோடது.

நான் : டீல் ஓ.கே..


பெட்டு வெச்சிட்டோமேன்னு நாங்களும் அந்த வேகாத வெய்யில்ல மாயாஜால் போய் படம் பாத்துட்டு வந்தோம் (அங்க தான் ஷோ ஆரம்பிக்க ஒரு 30 நிமிஷம் முன்னாடி போனாலும் டிக்கெட் கண்டிப்பா கிடைக்கும் :-)) ஆனா அந்த லூஸு இதெல்லாம் கிடையாது, நான் சொன்னது சத்யம்ல பாக்கறதுக்கு தான். ஸோ இதெல்லாம் நீ பெட்டுல ஜெயிச்சதா ஒத்துக்க மாட்டேன்னு சொல்லி ஏமாத்திட்டான் :-((

சில நாட்களுக்கு பிறகு,

கௌதம் : ஹே.. இந்த வாரம் MCA க்ளாஸ்ல இந்த ரெக்கார்ட் சப்மிட் பண்ணனும். வெள்ளிக்கிழமைக்குள்ள எழுதி குடுத்துடு.

நான் : சரி.


இரண்டு நாட்கள் கழித்து,

கௌதம் : ரெக்கார்ட் எழுதி முடிச்சிட்டியா?

நான் : ஓ...

கௌதம் : அப்போ கொண்டு வந்திருக்கியா?

நான் : இல்லியே..

கௌதம் : ஏன்?

நான் : நான் அன்னிக்கு டிக்கெட் ரிசர்வ் பண்ண சொன்னப்போ என்ன சொன்ன? அண்ணா டிக்கெட் ரிசர்வ் பண்ணி தாங்கண்ணான்னு சொல்லனுமா?

கௌதம் : அதுக்கென்ன இப்போ?

நான் : இப்போ நீ "அக்கா நாளைக்கு என் ரெக்கார்ட் நோட்ட கொண்டு வாங்கக்கா"ன்னு சொன்னா தான் நாளைக்கு ரெக்கார்டு வரும்.

கௌதம் : ஹே.. விளையாடாத...

நான் : நான் சீரியஸா தான் சொல்றேன்.. எங்க டயலாக்க கரெக்டா சொல்லு பாப்போம்.

கௌதம் : அதுக்கு நான் தூக்குல தொங்கலாம்.

நான் : உன் சாய்ஸ் :-)

கௌதம் : ஹே.. படிப்போட விளையாடாத.. ப்ளீஸ்..

நான் : சரி.. ஏதோ என்ன விட பெரியவனா போய்ட்ட.. போனா போகுது.. அக்காக்கு பதில் தங்கச்சின்னு வேணா சொல்லிக்கோ..

கௌதம் : (மனசுல திட்டிக்கிட்டே) தங்கச்சி, நாளைக்கு என் ரெக்கார்ட் நோட்டு கொண்டு வந்துடு தங்கச்சி. போதுமா?

நான் : போதும் போதும்.... நாளைக்கு உன் ரெக்கார்ட் நோட்டு வரும். இப்போ போய் உன் வேலைய பாரு..


நம்ம கிட்ட வாலாட்டறவங்கள ஒரு வழி பண்ணாம விடலாமா? நீங்களே சொல்லுங்க..

Saturday, June 9, 2007

புத்தம் புது ஆபிஸ் திறந்தாச்சு! :-D

கொஞ்ச நாள் அப்படி இப்படின்னு பிஜியா இருந்தா.. இத்தனை நாரதர்கள் கிளம்பி வந்து எங்களுக்குள் சண்டைன்னு புரளி கிளப்பி விடுறாங்கய்யா! அசருவோமா நாங்கள்!!! மேலும் மேலும் பேஸ்மண்ட் ச்ட்ராங் ஆகிட்டேதான் போகுதுன்னு இவ்வேளையில் சந்தோஷமாக சொல்லிக்கொள்கிறோம்.

எங்க ஒரு மாதமா அஞ்சு பாப்பாக்களையும் காணோம்ன்னு சிலர் கவலைப்பட்ட விஷயமும் எங்களுக்கு தெரிய வந்தது... ஏன் எங்கேன்னு இப்போ சொல்றோம்.. நோட் பண்ணிக்கோங்க! :D

இப்போ உள்ள ஆபிஸ் ரொம்ப சின்னதா இருக்கிறதுனால, எதிர்கட்சி "சின்ன வீடா வரட்டுமா?"ன்னு பாட்டு பாடி வழிவதாய் செய்தி.. அதுவுமில்லாமல், ஆபிஸ்க்கு தினமும் பலர் வந்து செல்வதால், இருக்கும் இடம் பத்தவில்லை.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஒரு பெரிய ஆபிஸ் கட்டலாம்ன்னு முடிவு பண்ணி, ஜப்பானிலேயே சூப்ப்ரான இஞ்சினியரை கூட்டி வந்து டிசைக்ன் செய்துள்ளோம்..

வீடும் கட்டி முடிச்சாச்சு.. ஆபிஸும் இப்போ திறந்தாச்சு!

இனி, இன்னும் நிறைய நிறைய கேஸ்களையும் பிரச்சனைகளையும் சந்தித்து தீர்வு காண நாங்கள் தயார். ரிஷெப்ஷன்ல ஒரு எங்களைப்போல அழகு நிறைந்த பொண்ணு ஒன்னை நியமித்திருக்கிறோம். இனி, அவங்கதான் எங்க PRO & ஆல் இன் ஆல் அழகு ராணி. யாருன்னு கண்டு பிடிங்க பார்ப்போம்! ;)

எப்போ வேண்டுமானாலும் நீங்கள் இந்த ஆபிஸுக்கு வாங்கோ வாங்கோ வாங்கோன்னு அன்புடன் வரவேற்பது உங்கள் பாசத்துக்குரிய ப.பா.ச பாப்பாக்கள். :-D











பி.கு: பார்த்துட்டு வயிறெரிய கூடாதுப்பா!! புள்ளைங்க வளருராங்கன்னு வாழ்த்தணும். ஸ்மைல் ப்லீஸ்! :D

Tuesday, June 5, 2007

ப்யூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ் - 2

என்னமோ இந்த ராமும் வ,வா.சங்கத்துப் பசங்க மட்டும் தான் காலேஜ்ல படிச்ச மாதிரி இதுங்களப் பார்த்து காப்பியடிக்கிறோமாம்.

நாங்க என்ன டுடோரியல் காலேஜ்லயா படிச்சோம்...நற...நற...

காலேஜ் லூட்டி,கலாட்டால்லாம் ஒரு அருமையான நிகழ்வுகள்.

நான் படிச்சது ஒரு கிறிஸ்டியன் காலேஜ்.காலேஜ்ல ஒரு பங்கு டார்ச்சர்னா ஹாஸ்டல் லைப் பத்து மடங்கு. பையாலஜி கேத்தரின் மிஸ்தான் ஹாஸ்டல்ல ஸ்டடி சுபர்வைசர். எப்பப்பாரு படி...படி...ன்னுட்டு.

படிப்பெல்லாம் எக்ஸாம் டையத்துல மட்டும்தான் இது கூட தெரியாதவங்கல காலேஜ் ஹாஸ்டல்ல வார்டனா போட்டு 24x7 NDTV சேனல் மாதிரி 24x7 படிப்பு.

இருக்கிற கொஞ்சம் மேல்மாடி சரக்கும் பாயிலாயி இவாப்பரேட் ஆகும்னு தெரியாதவங்க. ஹாஸ்டல்ல மாலை 5 முதல் 8 ஸ்டெடி ஹவர்.முடிச்சப்பிறகுதான் மணியடிப்பாங்க.அட சோத்துக்குத்தாம்லே.
தட்டத் தூக்கிக்கிட்டு ஏதோ கிரிமினல் கேஸ்ல மாட்டின கைதி மாதிரி கியூவுல நின்னு சோறு வாங்கனும். டைனிங் டேபிள் இருந்தாலும் நம்ம வானரப் படைங்களுக்கு கையேந்திபவன் ஸ்டைல்தான் பிடிக்கும்.
இப்படித்தான் ஓரு நாள் ஸ்டடி ஹவர்.என் டேஸ்காலர் பிரண்ட் ஒரு பாக்கெட் நாவல் குடுத்தா.

தமிழ்தேன் இங்கிலீஷ்னா பார்பரா கார்ட்லேண்டும் மில்ஸ் அன்டு பூன் மட்டும்தான் [அட சரித்திரக் கதை இல்லீங்க ] பாடப் புஸ்தகத்தோடு நாவலை வச்சிட்டு படிச்சிக்கிட்டிருந்தப்ப பின்னாடி டேபிள்ல இருந்த என் பிரண்ட் அப்பப்ப என்னாச்சுன்னு கதை கேட்டா. வழக்கம் போல கேத்தரின் மிஸ் ரவுண்டு உட்டுக்கிட்டிருந்தாங்க.நானும் எப்படியோ பாதி கதையை முடிச்சிட்டேன். அப்ப என்னாச்சு என பக்கத்தில் குரல் கேட்க நம்ம பின் சீட்டு பார்ட்டிதான் கதை கேக்குதுன்னு 'பாவம்டி விமலா அவ மாமியார் ரொம்ப மோசம்'என்றேன்.

'வாட் 'என்று 100 வாட்டில் ஒரு சத்தம் வர திரும்பினால் கேத்தரின் மிஸ்.

கைகாலெல்லாம் உதற சட்டென்று நாவலோடு நோட் புக்கை மூடிவிட்டு,
'பாவம் விமலா'என்றேன், மிஸ் மறுபடி 'வாட்' என 'பாவம் விமலா'என்று திரும்பத் திரும்பச் சொன்னேன். மிஸ் பயந்து போய் மதர் சுப்பீரியரை [ஹாஸ்டல் ஹெட் சிஸ்டர்] கூப்பிட அவங்க வந்து கேட்ட போதும்,
'பாவம் விமலா' எனக் கூற 'இப்படித்தான் மதர் திரும்பத் திரும்ப சொல்றா....திரும்பத் திரும்பச் சொல்றா...'

'மதர் பயந்து போயி 'கேத்தரின் ஆர் யூ ஆல் ரைட்'ன்னு பதறினாங்க, எனக்கு என்னமோ ஆயிடுச்சின்னு தூக்கிட்டுப் போய் 'சிக் ரூம்'ல போட்டுட்டாங்க.:(
சிக் ரூம் என்பது அந்த காலத்து 'அந்தமான் ஜெயில் மாதிரி'. உடம்பு சரியில்லன்னா டாக்டர் கிட்ட கூட்டிப் போய் ஊசி போட்டு சிக்ரூம்ல தள்ளிட்டாங்கன்னா ஈ காக்கா நம்மள திரும்பிப் பார்க்க உடமாட்டாங்க.
[என்ன தொத்து வியாதியா வந்துடிச்சி?]:-/

ரெண்டு நாள் கழிச்சி சிக் ரூம்ல இருந்து 'ரிலீஸ்' ஆனதும் பின் சீட் எருமை[இவளாலதானே மாட்டினேன்] 'சாரிடி இவளே...ஆனா அந்த கேத்தரின் அனகொண்டா கிட்டயிருந்து எப்படியோ உளறிக் கொட்டி தப்பிச்சே' என
'ஆமாம் ரெண்டு நாள் ஜெயில்ல கிடந்து அனுபவிச்சேன் போடி பேசாதே'என்றேன்.x(

மறு வாரமே கேத்தரின் மிஸ் எங்கிட்ட மாட்டுவாங்கன்னு அவங்களுக்கும் தெரியாது நானும் எதிர்பார்க்கலை[விதி யாரை விட்டது]

ஹாஸ்டல்ல டின்னருக்கப்புறம் 10 மணிக்கெல்லாம் லைட் ஆப் செஞ்சிடனும். படிக்கவும் கூடாது லைட்டும் எரியக்கூடாது.[படிக்கத்தான் ஸ்டடி ஹவர் இருக்கேன்னு சொல்வாங்க]. நாம எப்பவுமே 11ந்த் அவர் பார்ட்டி.அப்படித்தான் ஒருநாள் இரவு நானும் அதே சேம் ஓல்டு [எருமை] பிரண்டும் எல்லோரும் தூங்கினதுக்குப் பிறகும் டார்ச் லைட் வெளிச்சத்துல போர்வைக்குள்ள ஒளிஞ்சபடி படிச்சிக்கிட்டிருந்தோம். படிப்பு மேல அம்புட்டு அக்கறையில்லை .இப்பக்கூட படிக்காட்டி கரை சேர முடியாதுன்னு பயம்தான். நைட்டும் கேத்தரின் மிஸ் ரவுண்டு வருவாங்க.

அன்னைக்கு அவங்க வரும் போது டார்ச் வெளிச்சம் பார்த்துட்டாங்க. 'யாரது'என அதட்டியபடி ரூமை நோக்கி வர மாட்டுனா தீர்ந்தோம்னு யோசிச்சப்ப சட்டென்று ஒரு ஐடியா. டார்ச் லைட்டை எரியவிட்டு உள்ளங்கையால் அழுத்தி மூடியபடி போர்வையை முகம் வரை இழுத்துவிட்டுட்டு ஊ...ஊஉ.....ஊஊ.....என ரெண்டு பேரும் சவுண்டு விட்டோம்.
எரியும் டார்ச் லைட்டை உள்ளங்கையால் அழுத்தி மூடினா செக்கச் செவேல்னு தெரியும்ல.அத்தோட ஊ...ஊஊ ..ஊஉ சவுண்டும் சேர மிஸ் ஏதோ கொள்ளிவாய்ப் பிசாசோ பேயோன்னு அலறி விழுந்துட்டாங்க. >:)

மறுநாள் எதைப் பார்த்தாலும் ஊஉ...ஊஊ ன்னு அலறி விழ மதர் சுப்பீரியர் அவங்களை 'சிக்ரூம்ல' போடச் சொல்லிட்டாங்க.

நாலு..நாலே நாள் தான் சிக் ரூம்ல இருந்தாங்க அப்புறம்...? அப்புறமென்ன?பொட்டியக் கட்டிக்கிட்டு டிரான்ஸ்பர் வாங்கிட்டாங்க பாவம்

எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமேயில்லப்பா......;)

ப்யூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ் - 1

அட அட அட... கொஞ்ச நாளு ஆணி ஜாஸ்தியானதால எல்லாரும் அமைதியா இருந்துட்டோம். அதுக்குள்ள சங்கத்துல உள்சங்க கலவரம், வெளிசங்க கலவரம்னு ஆளாளுக்கு கெளப்பி விட்டுட்டே இருக்காங்கப்பா... யாராவது நாலு பேரு ஒற்றுமையா இருந்துட்டா பொறுக்க முடியாம எதையாவது கெளப்பி விடணும்னே ஒரு கும்பலு அலைஞ்சுட்டு இருக்கு. இதுக்கெல்லாம் அசர ஆளுங்க நாங்க இல்ல......... இல்ல......... இல்ல...........

சரி மேட்டருக்கு வருவோம். காலேஜ் லைஃப் லூட்டீஸ், ராகிங் காமெடி, காலேஜ் லவ் ஸ்டோரீஸ் இப்படி காலேஜ் வச்சு நிறைய எழுதியிருக்காங்க. ஒரு சேஞ்சுக்கு லேடீஸ் ஹாஸ்டல்ல நாங்க பண்ணின லூட்டீஸ் எல்லாம் எழுதினா என்னன்னு தோணிச்சு. சோ ஒரு சின்ன ட்ரை :)))

நாங்க செகண்ட் வந்ததும் அப்படியே பெருமை தாங்க முடியலை. ஃபர்ஸ்ட் இயர் பொண்ணுங்க வந்ததும் கூப்பிட்டு வச்சு ராகிங் பண்ணனும்னு முடிவு பண்ணி வச்சிருந்தோம். ராகிங் பண்ணக் கூடாதுனு ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ். 'ப்ரேக் த ரூல்ஸ்' - இதுதான நம்ம கொள்கை. ஹி... ஹி... எங்க ஜூன்ஸ் வந்ததும் ஒரு ரெண்டு நாள் கழிச்சு நைட்டு ஒரொருத்தரா எங்க ரூமுக்கு வர சொல்லி சொல்லி விட்டோம். ஒரு பத்து பேரை பாட்டு பாட சொல்லி டான்ஸ் ஆட சொல்லி அது இதுனு பயங்கரமா ஓட்டி தொரத்தி விட்டுட்டோம். அதுக்கப்புறம் ரெண்டு பேரு வந்தாங்க.

நான் வாய் இருக்க மாட்டாம ஒரு பொண்ணு கைல சாக்பீஸ் குடுத்து உலக மேப்பை தரைல வரைய சொன்னேன். அவளும் அவளுக்கு தெரிஞ்ச மாதிரி வரைஞ்சு வச்சா. எங்க ஆளுங்க அவகிட்ட இதுல எந்த நாட்டுல இருக்கனு காமின்னாளுங்க. அவ இந்தியா மேல கை வச்சு இங்கன்னு காமிச்சா. அப்படியே ஒவ்வொருத்தரா எந்த ஸ்டேட்டு, எந்த டிஸ்ட்ரிக்ட், எந்த ஊருன்னு வரிசையா கேக்க கேக்க அந்த பொண்ணும் கை வச்சு காட்டிட்டே வந்தது. அந்த பொண்ணு ஊரை சொன்னதும் அப்படியே ஆடி போயிட்டேன். எங்கூரு பொண்ணு. சரி அவ்ளோ பெரிய ஊருல நம்மள தெரியவா போகுதுனு விட்டுட்டேன். எந்த ஏரியான்னதும் எங்க ஏரியா பேர சொன்னா. அப்டியே மேடம்(ஹி... ஹி... நாந்தான்) கொஞ்சம் பின்னால போயி பதுங்கிட்டாங்க. ஒருத்தி சும்மா இருக்க மாட்டாம எங்க உங்க வீட்டு காலிங் பெல்ல அடி... உங்க அம்மா கதவ தொறக்கறாங்களான்னு பாக்கலாம்னா. அந்த பொண்ணு வேக வேகமா எங்க வீட்டுல காலிங் பெல் இல்லை அக்கான்னாலே பாக்கலாம். ஷேம் ஷேம் பப்பி ஷேமாயிடுச்சு கேட்டவளுக்கு. அவளும் சளைக்காம சரி கதவைத் தட்டி கூப்பிடுன்னா. அந்த பொண்ணு என்ன பண்றதுன்னு தெரியாம பேய் முழி முழிச்சது.

எல்லாரும் அவ என்ன பண்ணப் போறானு அவளையே பாத்துட்டு இருந்தப்ப யாரோ வர சத்தம். திரும்பி பாத்தா கதவுகிட்ட வார்டன் முறைச்சுக்கிட்டு இருக்காங்க. அட கடவுளே! சனி எங்க எல்லார் வாழ்க்கைலயும் இப்படியா விளையாடனும்???!!! உள்ள வந்தவங்க "ராகிங் பண்ணக் கூடாதுனு ஸ்ட்ரிக்டா ரூல்ஸ் போட்டிருக்குல்ல? அப்புறம் எதுக்கு ஜூனியர் பொண்ணை கூப்பிட்டு வச்சு ராகிங் பண்ணிட்டு இருக்கீங்க?" அப்படினு கோபமா கேட்டாங்க. நான் அப்படியே வீராவேசமா முன்னாடி வந்து "மேம் நாங்க ராகிங் பண்ணவே இல்லை. நாங்க எல்லாரும் ரூல்ஸை கண்ணை மூடிக்கிட்டு ஃபாலோ பண்றோம். எங்களையே இப்படி கேக்கறீங்க" அப்படின்னு வேகமா பேசினேன். உள்ளுக்குள்ள உதறுது அப்படியே. அந்த பொண்ணு மாட்டி வச்சிடுச்சுனா என்னடா பண்றதுனு. உடனே மேம் அந்த பொண்ணு பக்கம் திரும்பி "உன்னை இவங்க ராகிங் பண்ணினாங்களா? உண்மைய சொல்லு"-ன்னு மெரட்டல் தொனில கேட்டாங்க. அந்த பொண்ணு எங்களை பாத்து முழிச்சுக்கிட்டே "இல்லை மேடம். என்னை ராகிங் பண்ணல"ன்னா. அப்பாடா காப்பாத்திட்டானு நாங்க நிம்மதி பெருமூச்சு விடங்குள்ள "சரி சீனியர் ரூமுக்கு போகவே கூடாதுனு ஃபர்ஸ்ட் நாள் மீட்டிங்லயே சொன்னாங்க இல்ல. எதுக்கு இங்க வந்த?" அப்படின்னு அந்தம்மா கேட்டுடுச்சு. எங்களுக்கா உள்ளுக்குள்ள உதறுது. அந்த பொண்ணு எதும் பேசாம அமைதியா முழிச்சுக்கிட்டே நின்னது. உடனே அந்தம்மா "ஃபர்ஸ்ட் இயர்லயே இப்படி சொல்ற பேச்ச கேக்கறது இல்லை. ரூல்ஸ்னு எதுக்கு போடறோம்? இப்படி கேக்காம வர வேண்டியது. அப்புறம் என்னை அவங்க ராகிங் பண்ணினாங்க இவங்க ராகிங் பண்ணினாங்கன்னு ரிப்போர்ட் பண்ண வேண்டியது. நாளைக்கு ப்ரின்சிபால்கிட்ட சொல்லி டிசி குடுக்க சொல்றேன். இப்பவே பேச்சை கேக்கலைனா நீயெல்லாம் பின்னாடி எங்க ஒழுங்கா இருக்கப் போற............" இப்படி திட்டிக்கிட்டே போக அந்த பொண்ணு ரொம்ப பயந்து போயி "இல்லை மேம். நானா வரலை. இவங்கதான் என்னை வர சொல்லி ராகிங் பண்ணினாங்க" அப்டின்னு பயந்துகிட்டே சொல்லிடுச்சு. கண்ணுல வேற தண்ணி முட்டிட்டு நிக்குது. நாங்க எல்லாம் அப்டியே அமைதியா நின்னோம். வார்டன் எங்களை முறைச்சுப் பாத்துட்டே எங்க பக்கத்துல வந்தாங்க. ஒரு நிமிஷம் எங்க எல்லாரையும் அமைதியாப் பாத்துட்டு "அப்பவே சொன்னேன் இல்ல. அது வந்து மெரட்டுச்சுனா புது பொண்ணுங்க உண்மைய சொல்லிடுவாங்கன்னு" அப்படின்னு சொல்லிட்டு என் தோள் மேல கையப் போட்டுக்கிட்டு "பாவம்டி. அழுதுட்டா. அனுப்பிடுங்க. தூக்கம் வருது. நாளைக்குப் பாத்துக்கலாம்"னு அவ சொன்னதும்தான் அந்த பொண்ணுக்கு தெரிஞ்சது வந்தவ எங்காளுன்னு :)))

 

BLOGKUT.COM