Friday, May 11, 2007

பாவையர் போட்டோ ப்ரிண்டு போட்டாச்சு..

யாருல அங்க!!!

சங்கம் சங்கம்ன்னு ஒன்னு ஆரம்பிச்சுடாவ...

பேரு கூட வச்சு ரிப்பன் கட் பண்ணிடாவ.. அறிமுகம்ன்னு மாநாடும் நடத்திட்டாவ.. விருந்துன்னு வ.வா.சவையும் கூப்பிட்டு பாசத்தை காட்டிட்டாவ..

ஆன எனக்கு மட்டும் இன்விட்டேஷன் அனுப்பல அவங்கன்னு பொலம்புறது 70mm ஸ்க்ரீனுல ப்ளாஷோட தெரியுதுல..

நம்ம கையில என்னங்க இருக்கு? எல்லாம் அதோ மேலே சம்மளங்கால் போட்டு உக்கார்ந்து நம்மளையே நோட்டம் விடுறானே .. அவனோட செயல்தான்.. முருகா! முருகா !!

சுத்தி வளைச்சி இடியாப்பம் போடாம நானே மேட்டருக்கு வர்ரேன் மக்கா..
பாவையர்கள் இங்கே மொத்தம் அஞ்சு பேரு இருக்கோமுங்க.. இது எனக்கு தெரியும்ல. மேலே சொல்லுலன்னு சொல்றீங்களா? சரி.. சரி..

பாருல.. இவீங்கதான் அந்த அஞ்சு பேரு.. அறிமுக கூட்டதுல போட்டோ பிடிச்சு இப்போ சங்கத்து ஹால்ல இதைத்தானுங்கோ ஃப்ரேம் போட்டு மாட்டீருக்கோம்ல. :-)


இதுக்கு மேலேயும் கீழேயும் அறிமுகம் அவசியாமால?

இனியும் அடிச்சு ஆடுவோம் வாங்கல .. வந்து ஆட்டத்துல கலந்துட்டு மஜாவா இருங்கல.. ;-)

Wednesday, May 9, 2007

ப்ளாக் எழுதுவது எப்படி?

ப.பா.சங்கத்த ஆரம்பிச்சு ரெண்டு வாரம் ஆச்சு நம்ம மக்களுக்கு விருந்து போட்டு ஒரே கலைப்பா இருக்கறோம் இந்த நேரம் பார்த்து ஒரு சீரியஸ் பதிவு போடறேன் (ஸ்ஸப்பா இப்பவே கண்ண கட்டுதே .... )

திடீர்னு ஒரு நாள் மைபிரெண்ட் வந்து நம்ம கிட்ட இந்த ப்ளாக்ல போஸ்ட்டிங் போட்டு கலக்கறது எப்டிணு கேட்டாங்க. (என்னமோ நான் எழுதி கலக்கிட்டு இருக்கற மாதிரி :) )

ஒரு வளர்ர புள்ளயோட ஆசைய நிறைவேத்தனும்னு நானும் கொஞ்சம் டிப்ஸ் குடுத்தேன் பாருங்க.

தகுதிகள்
1. முதல்ல ப்ளாக் எழுத ஆரம்பிக்கனும்னா உங்ககிட்ட எந்த ப்ராஜக்ட்டும் இல்லாம தண்டமா பெஞ்ச்ல இருக்கணும். அப்டியே ஆணியிருந்தாலும் வேற யாராவது தலைல கட்ட தெரிஞ்சிருக்கனும்.

2. அப்புறம் இந்த தமிழ் அவ்வளவா தெரியாது எனக்கு ஒன்னமே தெரியாதுங்க அப்டீனு அப்பாவியா நடிக்க தெரியனும் (அப்பதான் எடுத்தவுடனே வர்ர ஆப்புகள் கொஞ்சம் கம்மியா இருக்கும்)

3. எழுத ஆரம்பிச்சவுடனே பின்னூட்டம் வர்லியேனு கவலை பட கூடாது. நீங்க
மத்த ப்ளாக்குகளுக்கு போயி பின்னூட்டம் போட்டு இருக்கறேன்னு அட்டெண்டண்ஸ் போட்டுட்டு வந்தாதான் நம்ம ப்ளாக்குக்கு எட்டி பார்ப்பாங்க.

4. எத்தனை ஆப்பு வந்தாலும் வகுப்புல டீச்சர் முன்னாடி அமைதியா நடிக்கற மாதிரி இங்கயும் அடி பாடாத மாதிரி நடிக்க தெரியனும்.

5. ரெண்டு மூணு போஸ்ட் போட்டு ஒரு அளவுக்கு பேர் தெரிஞ்சவுடனே ஏதாவது ஒரு சங்கத்த ஆரம்பிக்கனும் இல்லீனா இருக்கற சங்கம் ஏதாவதுல நாம சேர்ந்துக்கணும். (அப்பதான் ஏதாவது விருந்து விழானா நாம இருக்கறது நாலு பேருக்கு தெரியும் :) )

6. அடுத்தது முக்கியமான விசயம் ப்ளாக் ஆரம்பிச்சு கொஞ்ச நாள் ஆனவுடனே போஸ்ட்டிங் போட மேட்டர் கிடைக்காம இருக்கும்போது அழாம தைரியமா நாமும் ஒரு காலத்துல எழுதி பெரிய ஆளா வருவோம்னு மனச தேத்திக்க தெரிஞ்சிருக்கனும்.

எழுதறதுக்கு மேட்டர்

இந்த ப்ளாக்ல போஸ்ட்டிங் போட மேட்டர் கிடைக்காம முழிக்கறது இருக்கே அது பெருங் கொடுமை. அதுக்கு என்னோட ஐடியா.

1. கண்டிப்பா நிறைய fwd மெயில் படிக்கனும் அப்பதான் ஏதாவது ஒன்னு க்ளிக் ஆகும் அதைய உல்டா பண்ணி கொஞ்சம் தேத்தலாம்.

2. ஆபீஸ், அக்கம் பக்கத்துல நடக்கற எல்லா விசயத்தையும் ப்ளாக் பார்வையில் பார்க்கனும். புரியலியா சரி விளங்க சொல்றேன். மழை லேசா தூறுனாலும் சரி, வெயில் கொளுத்துனாலும் சரி உடனே அதுக்கு ஏத்தாப்புல ஒரு போட்டோவ போட்டு நாலு லைன் அது சம்பந்தமா எழுத தெரிஞ்சிருக்கனும்.

3. இன்னும் கொஞ்சம் பேமஸ் ஆகனும்னா இருக்கவேயிருக்கு ரெண்டு மூணு தலைப்புகள் ( அவங்க எதிர்ப்பு இவங்க எதிர்ப்பு, அந்த சுதந்திரம் இந்த சதந்திரம்) அதுல எந்த பக்கம் எழுதுனாலும் நீங்க உடனடியா பேமஸ் ஆகலாம். ஏன்னா அதுக்கு வர்ர பின்னூட்டம் கணக்கே கிடையாது. அதே அளவு ஆப்பும் வரும் ரெண்டு பக்கமிருந்தும். ஆனா உங்க ப்ளாக் பேமஸ் ஆகும் கட்டாயமா.

4. கடைசியா காமெடி பதிவுனு பேர் வெச்சு நம்ம கைப்புவையும் நாட்டாமையையும் கலாய்ச்சுனா கொஞ்சம் பேர் கை தட்டிட்டு போவாங்க. (ஆனாலும் கைப்பு, நாட்டாமை அநியாயத்துக்கு நல்லவங்கப்பா ஆவ்......)


பயன்கள்

முக்கியமான விசயம் இந்த ப்ளாக் எழுதறதால வரும் பயன்கள்.

1. முக்கியமா நேரம் போரடிக்காம ஓடும், வேலை இல்லாதப்ப. வேலையிருக்கறப்ப எழுதலைனா நாலு பேரு கேட்பாங்க ஏன் போஸ்ட்டிங் போடலைனு அப்ப பெருமையா நாலு பேருக்கு சொல்லிகலாம் வேலை இருக்குனு. :)

2. நிறைய நண்பர்கள் கிடைப்பாங்க. ஒரு சிலருக்கு தங்கமணிகூட கிடைக்கலாம். எல்லாம் நம்ம நேரத்தை பொருத்தது.

3. வார இறுதியில பொழுது போகலைனா அக்கம் பக்கம் இருக்கற ப்ளாக்கரையெல்லாம்
சேர்த்து ப்ளாக்கர் மீட்னு பேர் வெச்சு டைம் பாஸ் பண்ணலாம்.

4. அப்புறம் நம்ம நண்பர்களுக்கு மெயில் அனுப்ப யோசிக்க வேண்டியதில்ல.
ஏதாவது ஒரு காமெடி போஸ்ட்டிங்க காபி பேஸ்ட் பண்ணி அனுப்பிறலாம்.


மை பிரெண்ட் : எப்டி இப்படி இவ்வளவு விசயம் தெரிஞ்சு வெச்சிரக்கீங்க.

மீ : எல்லாம் அனுபவம்தான் ( உள்ளுக்குள்ள ரொம்ப பெருமையா சிரிச்சுகிட்டே)

மை பிரெண்ட் : கடைசியா ஒரு கேள்வி கேட்கலாமா அனு?

மீ : ஓ யெஸ் எந்த சந்தேகமா இருந்தாலும் கேளும்மா நான் விளக்கறேன்.

மை பிரெண்ட் : இவ்வளவு சொல்லறீங்க அப்புறம் ஏன் நீங்க ஒன்னுமே எழுதறது இல்ல?

மீ : ஓ அதுவா கொஞ்சம் வேலை அதிகம் அதான்

மை பிரெண்ட் மனசுக்குள்ள ( இந்த பதிலுக்கு ஒன்னும் குறைச்சலில்ல 8 மணி நேரம் அரட்டை அடிக்க மட்டும் முடியுது போஸ்ட்டிங் போட மட்டும் நேரம் இல்லியா? ) அப்டீங்களா சரி உங்க அட்வைஸ்கு நன்றி இப்போதைக்கு வர்ட்டானு எஸ்கேப் ஆயிட்டாங்க.

Monday, May 7, 2007

நாட்டாமையின் திருவிளையாடல்..

விருந்து ஆரம்பம்னு சொன்னதுமே நம்ம வ.வா.சங்கத்து மக்கள் எல்லாரும் அவங்கவங்க பேர் போட்டிருந்த கவுண்டர் பக்கம் போக அப்போ பாத்து நம்ம நாட்டாமை திடீர்னு "நில்லுங்க எல்லாரும்"னு கத்தினதுல நம்ம சங்கத்து சிங்கமெல்லாம் ஒரு நிமிஷம் மெரண்டு போய் அப்படியே நின்னுட்டாங்க..

** மக்களே.. இதுக்கப்புறம் கொஞ்சம் திருவிளையாடல் சீன கற்பனை பண்ணிக்கிட்டு மீதி பதிவ படிங்க :-)) **

ஷ்யாம் (நக்கீரர்) : தலைவரே.. சற்று இப்படி வாரும்..

கைப்புள்ள (தருமி) : முடியாது.. சாப்பிட்டு விட்டு தான் வருவேன்.. சாப்பாடு பரிமாருங்கள்..

ஷ்யாம் : அதில் தான் பிரச்சனை இருக்கிறது..

கைப்புள்ள : வந்தேன்.. என்னையா பிரச்சனை??

ஷ்யாம் : இந்த விருந்திற்கு அழைத்தது நமது சங்கத்தை தானே?

கைப்புள்ள : ஆம்.. ஆம்.. நமது சங்கத்தை தான் அழைத்தார்கள்... பின்ன..பக்கத்து சங்கத்துக்காரனை அழைத்ததற்கா நாங்கள் வந்து உட்கார்ந்திருக்கிறோம்?

ஷ்யாம் : அப்படியானால் சங்கத்தில் இருக்கும் நான ஏன் ் அழைக்கப்படவில்லை என்பதற்கு விளக்கம் கூறிவிட்டு நீங்கள் உணவருந்த செல்லலாமே....

கைப்புள்ள: ஆண்டவா.. நானே ரொம்ப பசியில் இருக்கிறேன்.. இவர் வேறு விளக்கமெல்லாம் கேட்கிறார்..

ஷ்யாம் : எனக்கும் ஒரு பங்கு கொடுத்துவிட்டு மற்றவர் உணவு உண்ணுகிறார்கள் என்றால் அதற்கு சந்தோஷப்படும் முதல் மனிதன் நான் தான். அதே சமயம் என்னை விட்டு விட்டு யாரேனும் உணவு உண்ணுகிறார்கள் என்றால் முதலில் வருத்தப்படுபவனும் நான் தான்.

கைப்புள்ள : ஓ.. எல்லாமே நீர் தானோ?? விருந்தளித்து பெயர் வாங்கும் கொடை வள்ளைகள் இருக்கிறார்கள்.. விருந்து உண்டே பெயர் வாங்கும் சாப்பாட்டு ராமர்களும் இருக்கின்றார்கள்..

ஷ்யாம் : ஹி..ஹி..

கைப்புள்ள : சிரிக்காதீர்.. இதில் நீர் எந்த பிரிவை சார்ந்தவர் என்பது உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன்.. ஒன்று நிச்சயம் அய்யா.. உம்மை போல் இரண்டு சிங்கங்கள்.. ச்சே.. இரண்டு சிங்கங்கள் வேண்டாம்.. நீர் ஒருவரே போதும்.. நமது சங்கம் உருப்பட்டுவிடும்.. விருந்தே எங்களுக்கு வேண்டாம்..

எங்களுக்கு வேண்டும்.. எங்களுக்கு வேண்டும்.. ஆசை.. ஆசை.. ஏண்டா... மானம் போச்சே... இனிமே எங்க போனாலும் சங்கத்துல எல்லாரையும் இழுத்துட்டு தான் போகனும் போல இருக்கே.. ஒருத்தன விட்டாலும் பிரச்சனை பண்ணுரானுங்களே.. நான் என்ன பண்ணுவேன்..

தொரத்தி தொரத்தி வந்து கேள்வி கேக்கற மாதிரியே இருக்கே.. இந்த ப.பா. சங்கத்த நம்பி சாப்பிட வந்ததுக்கு வீட்டு சாப்பாடும் போச்சு.. இப்போ கத்தி கத்தி கொரலும் போக போகுது.. அவங்கள கூப்பிட கூடாது... அவங்க இல்லை.. அவங்க இல்லை.. நம்பாதே.. நம்பாதே....

அது வரை தொலைபேசியில் வந்த வாழ்த்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல சென்றிருந்த நமது தங்கத்தலைவி .::மை பிரண்ட்::. அங்கே வருகிறார்...

கைப்புள்ள : வாங்கம்மா.. வாங்க.. திமுரு தானே உங்களுக்கு...

.::மை பிரண்ட்::. (சிவன்) : தலைவரே.. நன்றாக சாப்பிட்டீர்களா??

கைப்புள்ள : உம்.. எல்லாம் சாப்பிட்டோம்.. ஒதை ஒன்னு தான் பாக்கி.. விட்டா.. அதையும் வாங்கிட்டு வத்திருப்பேன்..

.::மை பிரண்ட்::. : (கோவமாக) தலைவரே.. என்ன நடந்ததென்று விளக்கமாக கூறுங்கள்..

கைப்புள்ள : பேசும் போது நல்லா தான் பேசுங்க.. விருந்து வைக்கும்போது மட்டும் ஒழுங்கா வைக்காதீங்க.. உங்க விருந்துல குத்தம் சொல்லிட்டாங்க..

.::மை பிரண்ட்::. : எவன் சொன்னது??

கைப்புள்ள : அங்க ஒருத்தன் இருக்கான்.. உங்க பாட்டன்.. நாட்டாமை.. அவன் தாம்மா சொன்னான்..

இருவரும் நாட்டாமை முன் வந்து நிற்கிறார்கள்..

.::மை பிரண்ட்::. : சாப்பிட உட்கார்ந்த தலைவரிடம் குற்றம் சொன்னவன் யார்??

ஷ்யாம் : விருந்து உபசரித்தலில் பிழை இருந்ததால் விருந்து எங்கள் சங்கத்து மக்கள் ஏற்கும் அருகதை அற்றது என்று தடுத்து கூறியவன் நான் தான்..

.::மை பிரண்ட்::. : ஓ.. நாட்டாமையோ.. என்ன குற்றம் கண்டீர்??

ஷ்யாம் : முதற்கண் விருந்து அளிக்கும் நீங்கள் யாரும் இங்கே பரிமாற இல்லாமல் வேறெங்கோ சென்றதன் காரணம்?

.::மை பிரண்ட்::. : அது நடந்து முடிந்த கதை.. தொடங்கிய பிரச்சனைக்கு வாரும்..

ஷ்யாம் : விருந்திற்கு முதலில் உபசரிப்பு முக்கியம் என்பது தெரிந்திருக்கும்..

.::மை பிரண்ட்::. : அறிந்தது.. அறியாதது.. உண்டது.. உண்ணாதது.. சமைத்தது.. சமைக்காதது... இனிப்பது.. கசப்பது.. உவர்ப்பது.. அனைத்தும் யாம் அறிவோம்..

ஷ்யாம் : எல்லாம் தெரிந்தவர் என்றால் ஏற்பாடு செய்யும் விருந்தில் பிழை இருக்காது என்று அர்த்தமா?? அதை யாம் எடுத்து கூற கூடாதா??

.::மை பிரண்ட்::. : கூறும்.. கூறும்.. கூறிப்பாரும்.. ஹா..ஹா... எங்கே குற்றம் கண்டீர்??? விருந்தில் உள்ள உணவிலா? அல்லது விருந்து ஏற்பாடு செய்த எங்களிடமா??

ஷ்யாம் : உணவில் குற்றம் இல்லை.. இருந்தாலும் நாங்கள் அதற்காகவெல்லாம் உண்ணாமல் இருக்க மாட்டோம்.. விருந்து ஏற்பாடு செய்த உங்களிடம் தான் குற்றம்..

.::மை பிரண்ட்::. : என்ன குற்றம்??

ஷ்யாம் : எங்கே உமது விருந்தாளிகளின் பட்டியலை கூறும்..

.::மை பிரண்ட்::. : வ.வா.சங்கத்து சிங்கங்கள்...

ஷ்யாம் : இதன் பொருள்??

.::மை பிரண்ட்::. : சங்கத்தில் உள்ள அனைத்து சிங்கங்களும் பட்டியலில் அடக்கம் என்பது..

ஷ்யாம் : இதன் மூலம் தாங்கள் சொல்ல விரும்புவது??

.::மை பிரண்ட்::. : எதிரிகளுக்கும் விருந்து கொடுத்து நட்பை வளர்க்கும் அன்பு உள்ளம் கொண்டவர்கள் நாங்கள் என்பது...

ஷ்யாம் : ஒருக்காலும் இருக்க முடியாது.. சங்கங்கள் எல்லாம் சுயநலச்சங்கங்கள்... எங்கள் சங்கத்தில் ஒரு சிலரை மட்டுமே அழைத்து மற்றவர்களை அழைக்காமல் எங்கள் கட்சியில் பூசலை உண்டாக்க நினைக்கிறீர்கள்..

.::மை பிரண்ட்::. : ர.ரா. சங்கமும் அப்படித்தானோ??

ஷ்யாம் : ஆம்..

.::மை பிரண்ட்::. : க.கா. சங்கம்??

ஷ்யாம் : க.கா. சங்கம் என்ன.. எல்லா சங்கங்களுமே தங்கள் சுயநலத்துக்காகவே பாடுபடுகிறார்ர்கள்..

.::மை பிரண்ட்::. : உங்கள் சங்கமும் அப்படித்தானோ??

ஷ்யாம் : எங்கள் சங்கம் என்ன.. நான் அன்றாடம் வழிபடும் என் தலைவி நயந்தாராவின் வீட்டிற்கு இடப்பக்கம் அமைந்திருக்கும் அவர் ரசிகர் சங்கமும் சுயநல சங்கமே...

.::மை பிரண்ட்::. : நிச்சயமாக??

ஷ்யாம் : நிச்சயமாக

.::மை பிரண்ட்::. : உங்கள் வெற்றிலை பெட்டியின் மீது ஆணையாக??

ஷ்யாம் : எனது கூஜாவின் மீது ஆணையாக..

.::மை பிரண்ட்::. : அல்லும் பகலும் நயந்தாரா போட்டோவை வைத்து ஜொள்ளு விடும் தாங்களா என் விருந்தை ஆராய்ந்து குற்றம் சொல்லத்தக்கவன்???

ஷ்யாம் : நாங்கள் என்ன தான் நயந்தாரா போட்டோவை வைத்து ஜொள்ளு விட்டாலும் எங்கள் எதிர் கட்சியை போற்றி அவர்கள் வளர உதவுவோமே அன்றி உங்களை போல் பொறாமையால் கலகம் செய்ய மாட்டோம்..

.::மை பிரண்ட்::. : நாட்டாமை.. என்னை நன்றாக பார்...
(பகார்டி பாட்டில் ஒன்றை நாட்டாமையின் கண் முன் ஆட்டுகிறார்.. )
நான் வைத்த விருந்தில் குற்றமா??

ஷ்யாம் : இல்லை இல்லை.. இல்லவே இல்லை.. தங்கள் விருந்தில் குற்றமே இல்லை.. தங்கள் சங்கத்தை போல் சமூக அக்கறை கொண்ட சங்கம் ஏது?? நீவீர் வாழ்க!! உமது கட்சி வாழ்க!!! உமது கொள்கை வளர்க!!!

சொல்லிவிட்டு பகார்டி பாட்டிலுடன் எஸ்கேப் ஆகிறார் நாட்டாமை.. தங்கள் உணவில் பங்குக்கு அவர் வரவில்லை என்ற சந்தோஷத்தில் மக்கள் அனைவரும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவை மகிழ்ச்சியாக உண்டு களித்தனர்.. இப்படி ஒரு அருமையான் விருந்தளித்த எங்கள் கட்சியினரை வாயார வாழ்த்திவிட்டும் சென்றனர்..

Friday, May 4, 2007

ப.பா.ச.வின் விருந்தும் வ.வா.ச.வின் வயித்தெரிச்சலும்

ப.பா.ச தலைமைக் கழகம் விழாக் கோலம் பூண்டிருந்தது

எதிரிகளையும் மதிக்கும் பண்பான பாவையரே
வாழ்க வாழ்க

விரோதிக்கும் விருந்தளிக்கும் வஞ்சியரே
வாழ்க வாழ்க


என வீதியெங்கும் பதாகைகள்

அனானிகளின் வருகை அதிகமிருக்கும் என்பதால் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதி என சங்கத்தின் தானைத் தலைவி
அஞ்சா நெஞ்சம் கொண்ட மலேசிய மங்கை
சொன்னதின் பேரில் வ.வா.சவினருக்கு அடையாள அட்டை அனுப்பப் பட்டிருந்தது.

ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர்.

கண்மணி: ஐயோ அபிஅப்பா வர்றாரு.. அழைப்பு அனுப்பலியே எப்படி?

மை ஃபிரண்ட்: அக்கா அவரு கைப்பு அழைப்ப புடுங்கிட்டு வந்துட்டாரு

கண்மணி: அப்ப கைப்பு?

அனுசுயா: அவரு 'தல' ங்கிறதால அனுமதி இலவசம்.

G3: எல்லாரையும் சமாளிக்கலாம். இவரு பாசக்கார தங்கச்சின்னே ஆப்பு வைப்பாருன்னுதான் இம்சை அழைப்ப அனுப்ப மறந்துட்டாங்க. சரி சமாளிப்போம்..

இம்சை: அக்கா சில்லி சிக்கன் ரெடி டேஸ்ட் பாருங்க.

கண்மணி: ஆஹா இவ்ளோ டேஸ்டாயிருந்தா சரி வராது. இன்னும்
கால் கிலோ வர மொளகாத்தூள கொட்டு. அவிங்க நாக்கு வெந்து கண்ணுல வுட்ற தண்ணியில ரெண்டு மாசத்துக்கு கிடேசன் பார்க் பக்கமே போகக்கூடாது.

G3: அக்கா இந்த 65க்கெல்லாம் ரெட் கலர் பெயின்ட் அடிக்கட்டுமா இல்ல வார்னிஷா?

மை ஃபிரண்ட்: வேண்டாம் நான் பச்சைக்கலர் அடிச்சி மலேசிய ஸ்பெஷல்,’பிக்கினி மிக்கினி’ சிக்கன் அப்டீன்னு சொன்னா பசங்க சுலபமா நம்பிடுவாங்க.

அனுசுயா: ரஸ்னா ரெடி அதுல கொஞ்சம் புளித்தண்ணியும் மிக்ஸ் பண்ணிட்டேன். ஏதோ புதுசான அயிட்டம்னு குடிக்கட்டும்

மை ஃபிரண்ட்: குடிச்சிட்டு வயித்தக் கலக்கட்டும்.. இப்பவே நம்ம சங்கத்தப் பாத்து அவிங்களுக்கு வயித்துல புளி கரைக்குது.

அபிஅப்பா மெள்ள கண்மணி அக்காகிட்ட வந்து,

அபிஅப்பா: தங்கச்சி இது உனக்கே ஓவராத் தெரியில? அந்த பாசக்கார புள்ளைங்க எப்படி,’யக்கோவ்...யக்கோவ்’ னு பாசமா இருந்தானுங்க.அவுங்களுக்கே ஆப்பா? ஏதோ முதுமை,புதுமைன்னு பதிவு போட்டமான்னு இல்லாம இந்த சின்ன புள்ளங்க கூட சேர்ந்துகிட்டு....

கண்மணி: ஸ்டாப்...ஸ்டாப்...நான் எப்பவாச்சும் உங்கள மாதிரி 40+ ன்னு சொன்னனா? இந்த கண்மணி ஆயாப் பதிவும் போடுவேன் ஆப்பு பதிவும் போடுவேன். பாசம் வேற...சங்கம் வேற.. நாங்க இதுல தெளிவா இருக்கோம்.

அபி அப்பா கண்ணை கசக்கியபடியே நகர,புலியும் ராமும் ஓடி வந்து கைத் தாங்கலாக அழைத்துச் செல்கிறார்கள்.

இம்சை: அக்கா அக்கா...

கண்மணி: என்னம்மா?

இம்சை: நம்ம புலிக்கு வச்சிருந்த பச்சக் கறிய அபி அப்பாவோட டைகர் தின்னுடுச்சு. இப்ப என்னக்கா பண்ண?

கண்மணி: இவரு தொல்லையே தாங்கல.இதுல டைகர் வேற.சரி சரி வர்ற வழில மூலைக் கடையில காக்கா பிரியாணி போட்டுக்கிட்டு இருந்தான். அதுல தனிக்கறியா ½ கிலோ வாங்கி அட்ஜஸ்ட் பண்ணிடுவோம்.

அனுசுயா: அக்கா அதுக்கு வேற செலவு பண்ணனுமா? நாமலே ஒரு காக்காயப் புடிச்சி...

G3: நோ நோ...அதுக்கு நேரமில்ல. அக்கா சொன்னபடியே செஞ்சிடுவோம்.

இம்சை: அதுக்குத்தான் கீரை ரெடி பண்றேன்னு சொன்னேன். இதுங்க நொந்த புலிங்க புல்லு மட்டுமில்ல புண்ணாக்கும் தின்னுவாங்க..

இதற்குள் தலைவிக்கு ஏகப்பட்ட போன் கால்ஸ்.மலேசியப் பிரதமரிடமிருந்து வாழ்த்து..புஷ்ஷிடமிருந்து பேக்ஸ்..கலாமிடமிருந்து வாழ்த்துக் கவிதை எனக் குவிய எதிரணியும் வந்து குவிந்தனர்.

மை ஃபிரண்ட்: அக்கா இவிங்க வாழ்த்தவா வந்தாங்க.. ஓசியில சோறுன்னதும் ஆணி புடுங்கறதையும் வுட்டுட்டு வந்துட்டாங்க பாருங்க

கண்மணி: சரி சரி போதும் நமக்கு சம பலம் உள்ளவங்களைத்தான் நக்கல் பண்ணனும்.நொந்து நூலாயி அந்து அவலாப் போனவங்களை ஒன்னும் சொல்லாதே..

பஃபே முறையில் விருந்து வைக்கப் பட்டிருந்தது.யார் யாருடைய அயிட்டம் எது எனக் கண்டு பிடிக்க சுலபமாக போத்திஸ்,சரவணா பாணியில் வெட்டி,ராம்,கைப்பு,புலி,ஜொள்ளு தேவ்,சிபி,எனக் கவுண்ட்டர் போல் எழுதி....வைக்கப் பட்டிருந்தது.

விழா ஆரம்பித்து கண்மணி டீச்சர் அனைவரையும் வரவேற்று
நிகழ்ச்சியைத் தொடங்க ப.பா.ச நிர்வாகிகள் அறிமுகம் ஆரம்பித்தது.

தலைவி: மை ஃபிரண்ட்
துணைத் தலைவி: இம்சையரசி
செயலாளர்: G3
பொருளாளர்: அனுசுயா
கண்காணிப்பு& ஆலோசகர்: கண்மணி


எனத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

அந்த நேரம் விவசாயி அவசரமாக டிராக்டருடன் வந்து இறங்கி அதிலிருந்த
நிர்வாகிகளின் குரூப் போட்டோ பெரிய சைஸ் டிஜிடல் பேனராக வரையப்பட்டு இருந்ததை கீழே இறக்கி வைத்தார்.வெல்வட் துணியால் கவர் செய்யப் பட்டிருந்த அந்த டிஜிட்டல் பேனர்
மலேஷிய பிரதமர் திறந்து வைப்பதாக ஏற்பாடு.

எதிரணியாக இருந்தாலும் பேனர் எடுத்து வரச் சம்மதித்த விவசாயிக்கு நண்டும் அருகம்புல்லும் கலந்த சூப் தாக சாந்திக்குத் தரப்பட்டது.

எதிரணியினர் கவனம் முழுவதும் சாப்பாட்டு அறைப் பக்கமேயிருக்க,ஜொள்ளு பாண்டியார் வழக்கம் போல் மகளிர் கூட்டம் பார்த்தபடி ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்தார்.

லேட்டாக வந்த வெட்டி ,’ஏமன்டி போஜன் எக்கட உண்ணாரு’ என,கோபி ,’ ரா ரா வெட்டி இன்னும் யாரும் துன்னலே நாங்களே வெயிட் சேஸ்தாரு.இவங்க பேசி முடிச்சதுக்கு பிறகுதான் எல்லாம் இக்கட கூச்சண்டி’ என அலுத்துக் கொண்டார்.

திடீரென்று ச்சுப்பிரமணி எங்கியோ பார்த்துக் குலைக்க அங்கே தூண் மறைவில் ஒளிந்திருந்த நாட்டாமை ஷியாம் தலையில் முக்காடு போட்டபடியே வெளிப்பட,

சிபி 'யோவ் ஓசி சோறு தின்னறதுன்னு முடிவோட வந்துட்டம் இதுல நீயி ஏன் ஒளிஞ்சி ஒளிஞ்சி நிக்கற' என

'இல்லப்பூ நான் உள்ள நுழஞ்ச போது யாரோ
'நாட்டாமை தீர்ப்ப மாத்து'
ப.பா.ச வை வாழ்த்து ' ன்னு ரைமிங்கா சவுண்டு உட்டாங்க அதான் 'என புலம்பினார்.

கைப்பு மட்டும் ஏதோ பறி கொடுத்தவர் போல சோகத்தில் இருக்க, சிபியார் தேற்றிக் கொண்டிருந்தார்.

‘தல இதெல்லாம் வீரனுக்கு ஜகஜம்.இப்படி ஆடிப் போனா எப்பிடி கொஞ்சம் வுட்டு புடிப்போம் இல்லாட்ட்டி........

‘இல்லாட்டி.....’

‘நாம கடையக் கட்டிடுவம்....’

‘அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்’ என கைப்பு குமுற ,

புலி என்னதான் செஞ்சிடுவாங்க பாப்பம்னு உறும,

தேவ் கையப் பிசைய ஜொள்ளு தன் கருமமே கண்ணாயிருக்க

வெட்டியும் அபிஅப்பாவும் ‘சோறு எப்ப போடுவாங்க;என ஒவ்வொருத்தராக் கேட்டுக் கொண்டிருக்க..

தின சூரியன் பத்திரிக்கை நிருபர் மொக்கையன் கைப்புவை பேட்டி கண்டார்.

'உங்களுக்கு எதிரா சங்கம் ஆரம்பிக்கப் பட்டது குறித்து உங்க கருத்து என்ன?'

'என்னத்தச் சொல்ல நம்மளுக்கே ஆப்பு வைக்க கிளம்பிட்டாய்ங்கய்யா...கெளம்பிட்டாய்ங்க...'

'நீங்க எப்படி எவ்வளவு ஆப்புன்னாலும் தாங்கறீங்க.'

'எவ்வளவு வச்சாலும் தாங்குறான் இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்களே.'

ராமும் தேவும் வலிய நிருபரிடம் சென்று,'இவங்களப் பத்தி மேட்டர 16ம் பக்கத்தில் 8 வது பத்தியில 'துக்கினியூண்டு' போடுங்க உங்களுக்கு வேண்டியத தனியா கவனிக்கிறோம்'என

'யோவ் என்னா நாட்டு நிலவரம் தெரியாதா உமக்கு வேர்ல்ட் கப்புக்கு அப்புறம் எல்லா பேப்பெர் சேனல் லயும் இவங்க சங்க மேட்டர்தான் ஹாட் டாபிக்.அவிங்க படத்தை மொதல்ல போட்ற சேனலுக்கு டி.ஆர்.பி ரேட்டிங் எகிறும்னு அவனவன் கியூவுல நிக்கறான் நாங்க கடேசி பத்தியில போடனுமாம்.போய் சாப்பிட்டுட்டு கெளம்பற வேலையப் பாருங்க'என்று சீறினார் நிருபர்.

சங்கத் தலைவி சிறப்புரை ஆற்ற வந்தார்.கூட்டத்தினரைப் பார்த்து,

'செலாமாட் டாத்தாங்' என்றார்.

'கைப்பு,'யோவ் என்னய்யா திட்டறாங்க 'என கிலியடைய,

தம்பி[உமாகதிர்],'சாப்பாடு தயாரா இருக்குன்னு சொல்லுதுங்க பாச மலரு 'என மொழிபெயர்க்க

உரையை முடித்த தலைவி,'ஜூம்பா லாகி' என்றதும்,

'ரெண்டாவது தபாவும் சோறு உண்டாம்' என அபி அப்பா மொழிபெயர்க்க,

அய்யனார் கடுப்பாகி,'யோவ் இவங்க சொல்றதக் கேக்காதே இங்கே போய்ப்பாரு புரியும் என்றார்.

கண்மணி;இம்சை;G3;அனுசுயாவும் தலைவி மை பிரண்ட் கூடச் சேர்ந்து கோரஸாக,

தெரிமா காசே.....ஜூம்பா லாகி எனக்கூறியதும்

கூட்டம் மிகப் பெரிய கரகோஷத்துடன் ஆர்ப்பரித்தது.விழா முடிந்தததும்

விருந்து ஆரம்பித்தது..

டிஸ்கி:வ.வா.சாவுக்கு ஏன் வயித்தெரிச்சல்னா காரம் அதிகமா போட்டதாலதான்.மத்தபடி ப.பா.ச வைப் பார்த்து இல்லை.அவிங்கதான் வயிறு முட்ட சாப்பிட்டுட்டு வாழ்த்தோ வாழ்த்துன்னு வாழ்த்தப் போறாங்களே.

***************************************************************************
ஓவர் டூ.....G3

Tuesday, May 1, 2007

எதிரிகளிடமும் அன்பு காட்டும் ப.பா.ச!!!

கிடேசன் பார்க்ல நடந்த பொதுக் கூட்டத்து போட்டோஸ் எல்லாம் வந்தாச்சு. எந்த போட்டோவை நம்ம ரிசப்ஷன்ல வைக்கலாம்னு மைஃப்ரண்ட், G3, அனுசுயா, இம்சை அரசி எல்லாரும் பயங்கரமா டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காங்க. திடீர்னு கண்மணி டீச்சர் சத்தம். "பாப்பாங்களா இங்க ஓடி வாங்க"-ன்னு.

எல்லாரும் ஓடிப் போய் அவங்க முன்னாடி நிக்கறாங்க. சீரியஸா கம்ப்யூட்டர பாத்துட்டு இருந்த கண்மணி டீச்சர் சந்தோஷமா நிமிந்து பாக்கறாங்க. இனி ஓவர் டூ ஸீன்.

கண்மணி : நம்ம எதிரி அணி வ.வா.ச-க்கு விருந்து குடுக்கணும்னு முடிவு பண்ணி கைப்பு-க்கு மெயில் அனுப்பினோம் இல்ல. அவங்க கண்டிப்பா வரோம்-னு ரிப்ளை அனுப்பியிருக்காங்க.
அதைக் கேட்டதும் எல்லாரும் வேக வேகமாக கைத்தட்டினார்கள்.

அனுசுயா : பின்ன ஓசி சோறுன்னதும் விழுந்தடிச்சு ஓடியாருவாங்கன்றது பச்ச புள்ளைக்கு கூட தெரியுமில்ல டீச்சர்........

கண்மணி : வெயிட்... வெயிட்... இனிமேதான் நாம ஜாக்கிரதையா இருக்கணும். நாம சரியா கவனிக்கலை-னு நம்ம மேல அவதூறு பரப்ப அவங்க தயங்க மாட்டங்க. அதனால ரொம்ப நல்லா விருந்து கொடுத்து அனுப்பனும். சரியா???
G3: பேசாம தாஜ்-ல ஆர்டர் பண்ணிடுவோமா???

மைஃப்ரண்ட் : ஓ நோ! இப்போதான் சங்கம் ஆரம்பிச்சிருக்கோம். ஏற்கனவே பொது கூட்டம் போட்டதுல எக்கச்சக்க செலவு. அதுமில்லாம நம்ம ரேஞ்சுக்கு யோசிக்காதீங்கக்கா. அவங்க ரேஞ்சுக்கு யோசிங்க...

அனுசுயா : பேசாம எல்லா திங்ஸையும் வாங்கி கொடுத்து அவங்களையே சமைக்க சொல்லிடுவோமா? பஃபே சிஸ்டம் மாதிரி பஃபே சமையல். எப்படி ஐடியா???

இம்சை அரசி : அய்யோ! அப்புறம் இந்த புள்ளைங்க நம்மள பழி வாங்கறதுக்குனே விருந்துக்கு கூப்பிட்டுச்சுங்க கைப்பு மீட்டிங்க போட்டு குமுறுவாரு. வேணாம்பா....

கண்மணி : அழகா நாமளே நம்ம கையால செஞ்சு விருந்து வைப்போம். அதுதான் அவங்களுக்கு பெரிய ஆனா கண்ணுக்கு தெரியாத ஆப்பு. சரியா?

G3 : ஆனா டீச்சர் ரொம்ப செலவு பண்ண வேணாம். ஏற்கனவே ரொம்ப செலவு பண்ணிட்டோம். அதனால இதை starting course மாதிரி starting விருந்துனு சொல்லிடுவோம்

மைஃப்ரண்ட் : வாவ்! சூப்பர் ஐடியா G3 அக்கா :)

அனுசுயா : அப்போ எதாவது ஒரு ஐயிட்டம் பண்ணி ஒரு ஜூஸ் செஞ்சுடுவோம்

இம்சை அரசி : ஹையா! அப்போ நாந்தான் கீரை பொரியல் செய்வேன்

G3 : ஆ!!!!!!!! வ.வா.ச-ல புலியெல்லாம் இருக்கே!! அது எப்படி கீரையெல்லாம் சாப்பிடும்???

கண்மணி : ஆமாமாம். அதனால நான்-வெஜ் செஞ்சுடுவோம்...

இம்சை அரசி : ஆனா எங்க யாருக்கும் நான்-வெஜ் செய்ய தெரியாதே.... :(((

கண்மணி : அது ரொம்ப ஈஸி. நான் சொல்லி தாரேன். நீங்க செய்ங்க. அவங்களை வச்சு டெஸ்ட் பண்ணிடுவோம்.

மைஃப்ரண்ட் : குட் ஐடியா! இப்படியே நாம சமையல்ல எக்ஸ்பர்ட் ஆயிடலாம்.

கண்மணி : சரி எல்லாரும் கவனிங்க. நாம சில்லி சிக்கன் செய்யறோம். சரியா?
G3 : அப்போ ஜூஸ்???

கண்மணி : அது ஆப்பிள் மில்க் ஷேக் செஞ்சுடலாம்....

அனுசுயா : அய்யோ வேணாம்!! அப்புறம் கைப்ஸ் அது ஒட்டகப்பால்ல செஞ்சதானு கேப்பாரு....

மைஃப்ரண்ட் : ஆமாம். அதனால ரஸ்னா செஞ்சுடுவோம். அதுதான் சீப் அண்ட் பெஸ்ட்

கண்மணி : சரி எப்படி செய்யறதுனு சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க. ஆளுக்கு ஒரு வேலை. மொதல்ல மைஃப்ரண்ட்... நீ என்ன பண்ற சிக்கன், சில்லி சிக்கன் பவுடர், ரஸ்னா, சர்க்கரை எல்லாம் வாங்கிட்டு வந்துடற.
G3... நீ சிக்கன் எல்லாம் கட் பண்ணி க்ளீன் பண்ணி மசாலாவை கரைச்சு அதுல ஊற வைச்சுடற. இம்சை... நீ வந்து சிக்கன் ஊறுனதுக்கப்புறம் அதை எண்ணைல போட போட அனுசுயா அதை ஃப்ரை பண்ணி எடுக்கணும். சின்ன புள்ளைங்கன்றதால எல்லாருக்கும் சின்ன வேலை. ரஸ்னா போடற பெரிய வேலைய நான் செஞ்சுடறேன். சரியா?

இம்சை அரசி : ஆனா டீச்சர் அந்த சிங்கங்கள் ஒண்ணொண்ணுக்கும் ஒரொரு மாதிரி செய்யணுமே. இப்போ பாருங்க புலிக்கு செஞ்சு குடுக்கறதை விட அப்படியே கொடுத்தாதான் ரொம்ப புடிக்கும்

மைஃப்ரண்ட் : ஆமாம். அப்படியே சாப்பிடுவேனு ரசிச்சு ருசிச்சு சாப்பிடும்

கண்மணி : புலிக்கு மொதல்லயே கொஞ்சம் தனியா எடுத்து வச்சிடுவோம். ப்ராப்ளம் சால்வ்ட்.

அனுசுயா : அதே மாதிரி வெட்டிக்கு ஆந்திரா ஸ்டைல்ல காரமா இருந்தாதான் பிடிக்கும்.

கண்மணி : வெட்டிக்கு நிறைய மொளகாப்பொடி தூவி குடுத்துடுவோம்.

G3 : அய்யோ கைப்ஸ் சில்லி ஒட்டகம் கேட்டுட்டார்னா??? தம்பி வேற துபாய் ஆளு.... அவரும் இப்படிதான் கேப்பாருனு நினைக்கறேன்....

கண்மணி : கைப்ஸ்கிட்டயும் தம்பிக்கிட்டயும் இது சில்லி ஒட்டகம்தான்னு அடிச்சு சத்தியம் பண்ணி சொல்லிடுவோம். வேற?

மைஃப்ரண்ட் : ராமு தம்பிக்கு வேற பேபி ஃபுட்தான் உடம்புக்கு ஒத்துக்கும்.. என்ன பண்ண?

அனுசுயா : ராமுக்கு சின்ன சின்னதா எலும்பு இல்லாததா பொறுக்கி எடுத்து குடுத்துடுவோம்.

இம்சை அரசி : விவசாயி அவங்க ஊரு ஸ்டைல்ல கோழி குருமா கேட்டாருனா?

G3 : விவசாயிக்கு கொஞ்சம் சில்லி சிக்கனை எடுத்து தண்ணில போட்டு கொதிக்க வச்சு கோழி குருமானு குடுத்துடலாம்.

மைஃப்ரெண்ட் : தளபதி-க்கு வேற ஸ்பெசல் கவனிப்பு குடுக்கணும். இல்லாட்டி அவருக்கு கோபம் தலைக்கேறிடுமே?

அனுசுயா : தளபதிக்கு கொஞ்சம் எலுமிச்சம்பழம், தக்காளி எல்லாம் கட் பண்ணி டெகரேட் செஞ்சு, சிக்கன் பளபளன்னு தெரிய வார்னிஷ் பூசிடுவோம்.
இம்சை அரசி : போர்வாள் வேற கச்சேரி வச்சாதான் சாப்பிடுவேன்னு அடம் புடிப்பாரே.....

கண்மணி : போர்வாளுக்கு சச்சேரி வைக்க வேணும்னா நம்ம பாப் பாடலாசிரியர் ஜி-யையும் விருந்துக்கு கூப்பிடலாம்.

மைஃப்ரண்ட் : ஜொள்ளு வேற அவர் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்க்கெல்லாம் குடுக்கணும்னு நிறைய கேப்பாரே....

G3 : ஜொள்ளுக்காக ஸ்பெஷலா மீந்து போனதெல்லாம் எடுத்து பேக் பண்ணி வச்சிடுவோம். கேட்டார்னா உடனே எடுத்து நீட்டிடுவோம்.

எல்லார் முகமும் குழப்பத்தில் இருந்து தெளிந்து ஒரு சந்தோஷ சூழல் நிலவுகிறது. இரு நிமிட அமைதிக்குப் பின்.....

கண்மணி , G3, இம்சை அரசி, அனுசுயா, மைஃப்ரண்ட்(கோரஸாக) : ஓகே! டன்!!!!!!!!!! ஹூர்ர்ர்ர்ர்ர்ரேரேரே............

மைஃப்ரண்ட் : சரி இந்த செலவை எந்த கணக்குல எழுதறது???

G3 : வேற எதுல??? வேஸ்ட் கணக்குலதான் ;))))

(விருந்து பற்றிய பதிவு விரைவில்......)


ஓவர் டூ கண்மணி......

 

BLOGKUT.COM